1453.

     சற்றே யெனினும்என் நெஞ்சத்
          துயரம் தவிரவும்நின்
     பொற்றே மலர்ப்பதம் போற்றவும்
          உள்ளம் புரிதிகண்டாய்
     சொற்றேர் அறிஞர் புகழ்ஒற்றி
          மேவும் துணைவர்தஞ்செம்
     மற்றேர் புயத்தணை மானே
          வடிவுடை மாணிக்கமே.

உரை:

      வடிவுடை மாணிக்கமாகிய அம்பிகையே! ஞான ஒளியுடைய தெய்வத்தன்மை பொருந்திய வேதமாகிய பூங்கொடியே, பசுங்கொம்பே, அழகிய திருவொற்றியூரில் கோயில் கொண்டிருக்கின்ற கோமளமே, கூரிய வேல் போன்ற கண்களையுடைய மான் போன்ற அன்னையே, அடியவனாகிய என்பால் எத்தகைய குற்றங்களிருந்தாலும் அவற்றைப் பொறுத்தருளிப் பலதளையாய் விரியும் பல்வகைத் துன்பங்களையும் நீக்கி உன்னுடைய நல்ல திருவருளைச் செய்க. எ.று.

     தெய்வங்களைப் பரவுதற்கு என்று தோன்றியமைந்த வேதங்களை “திகழ் தெய்வ மறை” என்று சிறப்பிக்கின்றார். மறைகளைப் பன்னாளும் பன்முறை ஓதிப் பயில்வதால் பெறலாகும் மெய்ஞ்ஞானத்தின் திருவுருவாக அமைந்தமை உணர்ந்து பரவுகின்றாராதலால், “தெய்வ மறைக்கொடியே” என்று வடலூரடிகள் வாய்மலர்ந்து மகிழ்கின்றார். அம்பிகையின் திருமேனி பூக்கள் நிறைந்த பசுமை நிறமுடைய மெல்லிய கொம்பு போல்வதுபற்றி “மரகதக் கொம்பே” என்றும், திருவொற்றியூர் திருக்கோயிலில் தன்னருள் பெறவந்து பணிபவர்க்கு அருளப்படும் அவளது அருட்காட்சி அழகின் வடிவமாக விளங்குதல் தோன்ற “எழில் ஒற்றிக் கோமளமே” என்றும், கூரிய வேல் போன்ற தோற்றமும் அருள் வழங்கும் கவினும் கொண்டிருப்பதுபற்றி “அடியேர் அயில்விழி மானே” என்றும் பரவுகின்றார். வேண்டுவார் வேண்டுவதெல்லாம் தங்கள் பால் உள்ள பிழை பொறுத்தருள வேண்டுமென்பது. அம்முறையில் அம்பிகையை வழிபட்டுத் துதிக்கும் வடலூரடிகள், தமக்குள்ள வருத்தத்தின் மிகுதி நோக்கி அதற்குக் காரணமாகிய பிழை ஆற்றவும் பெரிது போலும் என்று அஞ்சி, “அடியேன் மிசை எப்பிழை இருந்தாலும் அவை பொறுத்து நற்சீரருள்வாய்” என்று வேண்டுகின்றார். துன்பமிக்கிருப்பதற்குக் காரணம் தம்பாலுள்ள பிழைகளின் பன்மையும் அவற்றின் கொடிய தன்மையும் ஆம் என்று எண்ணுகின்றாராதலின் “எப்பிழை இருந்தாலும் அவை பொறுத்து” என்றும், தாக்கி வருத்துகின்ற துன்பங்கள் பல தளையாய் விரிந்து பெருகி நோய் செய்வதுபற்றி “செடியேதம்” என்றும் செப்புகின்றார். செடி - துன்பம்.

      இதன்கண், வடிவுடை மாணிக்கமாகிய அம்பிகைபால் முறையிடும் வடலூரடிகள், தம்மை வருத்தும் துன்ப மிகுதியை யெண்ணி அவை பலவாய்க் கொடிய தன்மையவாய்க் கிளைத்துப் பரவும் துன்ப இயல்பினவாய் இருத்தலை எடுத்தோதிப் பிழைகளைப் பொறுத்துப் பலவாகிய துன்பங்களை நீக்கித் தெளிவும் ஒழுக்கமும் நல்கும் திருவருள் வழங்குமாறு கேட்கின்றார்.

     (68)