1457.

     கற்பே விகற்பம் கடியும்ஒன்
          றேஎங்கள் கண்நிறைந்த
     பொற்பேமெய்த் தொண்டர்தம் புண்ணிய
          மேஅருட் போதஇன்பே
     சொற்பேர் அறிவுட் சுகப்பொரு
          ளேமெய்ச் சுயஞ்சுடரே
     மற்பேர் பெறும்ஒற்றி மானே
          வடிவுடை மாணிக்கமே.

உரை:

     வடிவுடை மாணிக்கமாகிய அம்பிகையே, கற்பின் உருவமே! விகற்பம் யாவுமில்லாதபடி விளங்குகின்ற தனிப்பொருளே, எங்கள் கண்நிறைந்த அழகே, மெய்ந்நெறி கொண்ட தொண்டர்கள் செய்கின்ற புண்ணிய வடிவமே, அருள் ஞானத்தால் விளையும் இன்பமே சொல்லப்படும் பேரறிவாளர் உள்ளத்திலே துலங்கும் சுகத்துக்குரிய ஞானப்பொருளே, மெய்யான தனிப்பெருஞ்சுடரே, வளம் பொருந்திய செல்வப்பேர் கொண்ட திருவொற்றியூரில் எழுந்தருளும் அம்பிகையே, எமது வணக்கத்தை ஏற்று அருளுக. எ.று.

     கல்விச் செல்வம் நல்கும் ஞானத்தின் திருவுருவமாக விளங்குபவளே, என்பார் 'கற்பே' என்கின்றனர். ஞானத்தால் மேம்பட்டவர்க்கு விகற்பமில்லாத தனித்தூய காட்சியாதலின் அதனை “விகற்பம் கடியும் ஒன்றே” என்று விரித்துரைக்கின்றார். காணப்படும் பொருளின் காட்சிக்கவின் காணும் கண் நிறைந்து விளங்குமாயின் அதுவே அப்பொருளுக்குப் பொற்புத் தருவது பற்றி “எங்கள் கண் நிறைந்த பொற்பே” என்று எடுத்துரைக்கின்றார். மெய்த்தொண்டராயினார் நினைவனவும் சொல்வனவும் செய்வனவும் யாவும் புண்ணியமாவதுபற்றி, “மெய்த்தொண்டர்தம் புண்ணியமே” என விளம்புகின்றார். திருவருள் நெறி நின்று சிவத்தை உணர்கின்ற ஞானம் அருள்ஞானமாய் நிறைந்த இன்பமாய் இருத்தல் உணர்த்த “அருட்போத இன்பே” என்கின்றார். உலகத்துப் பெரு நூலுணர்ந்த பேரறிஞர்களின் அறிவின்கண் தோன்றித் தெளிந்த ஞான வாழ்வுக்குப்பொருளாக இருப்பதுபற்றி அம்பிகையை “சொல் பேரறிவுள்ள சுகப் பொருளே” என்றும், உலகிலுள்ள ஞாயிறு முதலிய ஒளிப்பொருட்களால் விளக்கப்படாது தனி அருட்பெருஞ்சுடராய் ஒளிர்வது பற்றி “மெய்ச் சுயஞ்சுடரே” என்றும் புகழ்கின்றார். இயற்கை வளத்தால் பெயர் பெற்று விளங்குவது தோன்றத் திருவொற்றியூரை “மற்பேர் பெறும் ஒற்றி” என்று சிறப்பிக்கின்றார்.

     இதன்கண் கற்புருவாய், விற்கபமில்லாக் காட்சியாய், கண்நிறைந்த பொற்பாய், தொண்டர்தம் புண்ணியமாய், அருட்போத இன்பமாய், சுகப் பொருளாய், சுயஞ்சுடராய் வடிவுடை மாணிக்கமாகிய அம்பிகை திருவொற்றியூரில் வீற்றிருக்கின்றாள் என்கின்றனர்.

     (72)