1458. மிகவே துயர்க்கடல் வீழ்ந்தேனை
நீகை விடுதலருள்
தகவே எனக்குநற் றாயே
அகில சராசரமும்
சுகவேலை மூழ்கத் திருவொற்றி
யூரிடந் துன்னிப்பெற்ற
மகவே எனப்புரக் கின்றோய்
வடிவுடை மாணிக்கமே.
உரை: வடிவுடை மாணிக்கமாகிய அம்பிகையே, எனக்கு நல்ல தாயானவளே, அகில உலகத்துச் சராசரங்களும் இன்ப வாழ்வாகிய கடலில் மூழ்கும்படி, திருவொற்றியூராகிய சிறப்புடைய இடத்தை அடைந்து, தாயாய்க் கருக்கொண்டு பெற்ற குழவியெனப் பாதுகாப்பவளே, துயர்க்கடலில் மிகவும் வீழ்ந்து வருந்துகின்ற என்னைக் கைவிடுவது அருளுருவாகிய உனக்குத் தகுதியாகாதே. எ.று.
'துயர்க்கடலில் மிக வீழ்ந்தேனை' என இயைத்து உரைக்க. கரைகாண முடியாதபடி பெருகித் தோன்றுதலால், “துயர்க்கடல்” என்கின்றார். அருளே திருமேனியாக உடையவளாதலின் வடிவாம்பிகையைக் “கைவிடுதல் அருட்கு அழகோ” என்று முறையிடுகின்றார். பெற்ற தாய் போலப் பேரன்பு செய்தலின், “எனக்கு நற்றாயே” என்று புகழ்கின்றார். “அகில சராசரம்” என்பது அகில உலகத்திலுமுள்ள சரமும் அசரமுமாகிய உயிர்களை. உயிர்களனைத்தும் முடிவில் பேரின்பமாகிய இன்பக்கடலை எய்தவேண்டும் என்பது சித்தாந்த சைவத்தின் முடிபு ஆதலின், “அகில சராசரமும் சுக வேலை மூழ்க” எனச் சொல்லுகின்றார். வேலை - கடல். திருவொற்றியூரின்கண் அம்பிகை கோயில் கொண்டிருப்பதின் கருத்து, பெற்ற குழந்தையைப் பேணிப் புரக்கும் தாய்போல உயிர்கள் அத்தனையும் பாதுகாக்க வேண்டும் என்ற குறிக்கோள் பற்றி என உணர்க.
இதன்கண், சகல சராசரங்களும் பிறப்பிறப்புக்களின் முடிவில் சிவபெருமான் திருவடியின்பப்பேறு பெறவேண்டும் என்பது கருத்து என்றும், அது குறிக்கோளாகவே அம்பிகை கோயில் கொண்டிருக்கிறாளென்பதும் விளக்கியவாறாம். (73)
|