1459.

     வேதங்க ளாய்ஒற்றி மேவும்
          சிவத்தின் விளைவருளாய்ப்
     பூதங்க ளாய்ப்பொறி யாய்ப்புல
          னாகிப் புகல்கரண
     பேதங்க ளாய்உயிர் ஆகிய
          நின்னைஇப் பேதைஎன்வாய்
     வாதங்க ளால்அறி வேனோ
          வடிவுடை மாணிக்கமே.

உரை:

     வடிவுடை மாணிக்கமாகிய அம்பிகையே, நான்காகிய மறைகளாகியும், திருவொற்றியூரில் கோயில் கொண்டருளும் சிவத்தின் கண் விளையும் திருவருளாகவும், ஐம்பெரும் பூதங்களாகியும், பொறிகளாகியும், புலன்களாகியும், மனமுதலாகச் சொல்லப்படுகின்ற கரணவகைகளாகியும், உயிர்களாகியும் விளங்குகின்ற உன்னைப் பேதையாகிய நான் என்னுடைய வாயால் தொடுக்கப்படும் வாதப்பிரதி வாதங்களால் அறிய இயலுமோ? எ.று.

     ஞான நிலையமாதலின் அம்பிகையை “வேதங்களாய்” என விளம்புகிறார். சிவஞானத்தால் ஒருவர் பெற விளைவது திருவருள் இன்பமாதலால், சிவத்தின் விளை அருளாய் என்றும், சிவசக்தி சங்கற்பத்தால் தோற்றுவிக்கப்படுவது பற்றி “பூதங்களாய்ப் பொறியாய்ப் புலன்களாய்” என்றும் சொல்லுகிறார். மனம் முதலிய கரணங்கள் மாயா காரியமாம் வகையில் ஒன்றாயினும், நினைத்தல் முதலிய தொழில் வகையில் மனம் முதலிய கரணங்கள் வேறுபடுவது பற்றி, “புகல் கரணபேதங்களாய்” எனப் புகல்கின்றார். உயிர்க்குயிராய் இருந்து தெரிய வேண்டுவனவற்றைத் தெரிவித்து நெறியின்கண் செலுத்துவதுபற்றி “உயிராகிய நின்னை” என்று பரவுகின்றார். இவ்வாறு உயிர்க்குயிராய் அறிவுக்கறிவாய் சகல புவனங்களையும் பிற அத்துவாக்களையும் படைத்தருளுதலின், அம்பிகையை வாதப்பிரதி வாதங்களால் துணிந்து உணர மாட்டாமையை எண்ணி “என்வாய் வாதங்களால் அறிவேனோ” என்று மொழிகின்றார்.

     இதன்கண், சகல புவனப் படைப்புகளுக்கும் உயிர்கட்கும் மூல காரணமாயிருக்கும் வடிவாம்பிகையின் தத்துவ ஞான காரண நிலையைச் சுருங்கக் காட்டுகின்றார்.

     (74)