146.

    வாழும் நின்திருத் தொண்டர்கள் திருப்பதம்
        வழுத்திடா துலகத்தே
    தாமும் வஞ்சர்பால் தாமும்என் தன்மையென்
        தன்மை வன்பிறப்பாய
    ஏழும் என்னதே யாகிய தையனே
        எவரெனைப் பொருகின்றோர்
    ஊழும் நீக்குறும் தணிகையெம் மண்ணலே
        உயர் திருவருட் டேனே.

உரை:

     ஊழையும் உப்பக்கம் துரத்தும் தணிகை மலைத் தலைவனே, உயர்ந்த திருவருளாகிய தேனே, சிவஞானச் செந்நெறிக்கண் வாழ்வு நடத்தும் நின்னுடைய திருத் தொண்டர்களை வழிபடாமல் உலகின்கண் கீழ்மைச் செயற்கண் செல்லும் வஞ்சகர்களின் கூட்டத்தில் படிந்துறையும் என் தன்மையை எத்தன்மை யென்பது? வன்மை மிக்க ஏழு பிறப்பும் எனக்குரிய வாயின; ஐயனே, இவ்வகையில் எனக்கு ஒப்பாவார் யார்? ஒருவரும் இல்லை, எ. று.

     ஊழினும் வலி மிக்கது பிறிதில்லை எனத் திருவள்ளுவர் முதலியோர் கூறுவர்; ஆயினும், இறைவன் திருவடி பரவுபவரை ஊழ்வினை வந்து நெருங்கா என அவர்களே யுரைப்பதால், “ஊழும் நீக்குறும் தணிகை யெம் அண்ணலே” என உரைக்கின்றார். சிறப்பும்மை, ஊழின் வலி மிகுதி புலப்படுத்துகிறது. மக்கள் தேவர் என்ற இரு திறத்தாராலும் விலக்க வொண்ணாமை பற்றி, “ஊழிற் பெருவலி யாவுள” என்ற திருவள்ளுவர், வரம்பி லாற்றலுடைய இறைவ னெதிரில் ஊழ்வினை வலி யழிந்து கெடுதலால், இருவினையும் இறைவன் திருவடி பரவிய வழி வந்தணுகா என்றமையின் முரண்பாடு இல்லாமை அறிந்து கொள்க. உயர்ந்தவை யனைத்தினும் உயர்ந்தமை தோன்ற, “உயர் திருவருள்” எனப் புகழ்கின்றார். திருத் தொண்டர்கள் மேற் கொண்டு வாழ்வது சிவஞானச் செந்நெறி யாதலால், “வாழும் நின் திருத்தொண்டர்” எனச் சிறப்பிக்கின்றார். “மாலற நேயம் மலிந்தவர் வேடமும் ஆலயந் தானும் அரன் எனத் தொழுமே” (சிவஞானபோதம் 12) என்று சான்றோர் அறிவுறுத்தலால், “திருத் தொண்டர் திருப்பதம்” வழுத்தாமை குற்றம் என்று கூறுகிறார். வஞ்சனை பொய் முதலியன உலகியல் வாழ்வில் மிகுந்து மக்களை அதன்கண் அழுந்தச் செய்வதால் “உலகத்தே தாழும் வஞ்சர்” என்று உரைக்கின்றார். வஞ்சரொடு கூடி வாழ்தல், “வஞ்சர்பால் தாழும் தன்மை” எனப்படுகிறது. இத் தன்மை தீமை பயப்ப தென்றற்கு, “என் தன்மை என் தன்மை” எனக் கூறுகிறார். நீக்கற் கருமை பற்றி “வன் பிறப்பு” எனப்படுகிறது. என்ன தாகியது, பால் மயக்கம். என் தன்மை என் னென்று காரணம் புணர்த்தமையின், என்னதே யாகிய தென ஆக்கம் பெய்துரைக்கின்றார். எய்திய குற்றம் பெருகித் தோன்றுவதால் “எவர் எனைப் பொருகின்றார்” என மொழிகின்றார்.

     இதனால் வஞ்சர்பால் தாழ்ந் தொழுகிய குற்றத்தால் ஏழு பிறப்புக்கும் ஆளாயினேன் என்றாராயிற்று.

     (6)