1460.

     மதியே மதிமுக மானே
          அடியர் மனத்துவைத்த
     நிதியே கருணை நிறைவே
          சுகாநந்த நீள்நிலையே
     கதியே கதிவழி காட்டுங்கண்
          ணேஒற்றிக் காவலர்பால்
     வதியேர் இளமட மானே
          வடிவுடை மாணிக்கமே.

உரை:

      திருவொற்றி நகரைக் காவல் புரிந்தருளும் சிவனுடைய இடப்பால் உறையும் அழகிய இளமையோடு கூடிய மான் போன்ற வடிவுடை மாணிக்கமாகிய அம்பிகையே, அறிவு வடிவானவளே,சந்திரன் போன்ற முகத்தையுடைய மங்கையே, அடியவர்கள் மனத்தில் பொருந்தவைத்த ஞானச் செல்வமே, கருணையின் நிறைவே, சிவானந்தமாகிய நெடிய நிலையமே, எல்லா உயிர்கட்கும் முடிந்த முடிவாக இருக்கின்றகதியே, சிவகதிக்கு வழிகாட்டுகின்ற ஞானக்கண்ணே, அருள் புரிவாயாக. எ.று.

     திருவொற்றியூர்க்கு அருட்காவல் புரியும் அரசர் பெருந்தகையாக விளங்குதலால், சிவபெருமானை “ஒற்றிக் காவலர்” என்று உரைக்கின்றார். சிவனுடைய இடப்பாகத்தில் எழுந்தருளும் வடிவுடை அம்பிகையின் திருவுருவை “வதியேர் இளமானே வடிவுடை மாணிக்கமே” என்று சொல்லோவியம் செய்கின்றார். ஞானத்தின் அருளுருவினளாதலின் மதியென்றும், முழுமதி போன்ற முகமுடைய மங்கையாய்க் காட்சி தருதல் பற்றி “மதிமுக மானே” என்றும் புகழ்கின்றார். அம்பிகையின் திருவருள் வேண்டி அவளது திருவடியை மனத்தில் வைத்து வழிபடும் அடியவர்க்கு மனம் நிறைந்த அருள்நிதியாக விளக்கம் தருவது பற்றி “அடியர் மனத்து வைத்த நிதியே” என்று பரவுகின்றார். நிறைந்த கருணை புரிந்து சிவபோகப் பெருவாழ்வில் சுரக்கும் இன்பத்தில் அன்பர்களை இருத்தி மகிழ்விப்பது நினைந்து, “கருணை நிறைவே சுகானந்த நீணிலையே” என்றும், ஆத்மாக்களெல்லாம் வேண்டுகின்ற சுபகதியாய், அக்கதியை நோக்கிச் செல்வார்க்கு உண்மை நெறி காட்டும் ஞானக் கண்ணாய் விளங்குதலால், “கதியே கதிவழி காட்டுங் கண்ணே” என்றும் மனங் கனிந்துருகி உரைக்கின்றார்.

     இதன்கண், வடிவுடை மாணிக்கமாகிய அம்பிகை சகள வடிவில் மதிமுக மான் போலவும், சிவனுடைய இடப்பால் வதியும் மடமானாகவும் காட்சி தந்து, அகள நிலையில் அடியவர் மனத்தில் கருணையாய் நிறைந்து, சுகானந்த நீணிலையமாய்ச் சிவகதிக்கு வழிகாட்டும் சிவஞானப் பேரொளியாய்த் திகழ்கின்றாள் என்பதாம்.

     (75)