1461. ஆறாத் துயரத் தழுந்துகின்
றேனைஇங் கஞ்சல்என்றே
கூறாக் குறைஎன் குறையே
இனிநின் குறிப்பறியேன்
தேறாச் சிறியர்க் கரிதாம்
திருவொற்றித் தேவர்மகிழ்
மாறாக் கருணை மழையே
வடிவுடை மாணிக்கமே.
உரை: வடிவுடை மாணிக்கமாகிய அம்பிகையே, திருவொற்றியூர்க்கண் கோயில் கொண்டிருக்கும் சிவன் திருவுள்ளம் மகிழுமாறு நீங்காக் கருணையை மழைபோல் வழங்குபவளே. நின் திருவருளைப் பெறுவது உண்மை ஞானமில்லாத சிறியவர்க்கு அரிது என்பர்.
நீங்காத பெருந் துயரத்தில் அழுந்தி வருந்துகின்ற என்னை, இப்பொழுது அன்போடு நோக்கி, நீ அஞ்சுதல் விடுக என்று சொல்லாமலிருக்கின்ற குறை என் தவக்குறையாகும்; உன் திருவுள்ளக் குறிப்பு யாதோ, அறியேன். எ.று.
இடையறவின்றித் துன்பம் தொடர்ந்து வந்து வருத்துதலால் “ஆறாத் துயரத் தழுந்துகின்றேன்” என்று தமது நிலையைத் தெரிவித்து அதற்குத் தீர்வு காணும் வகையில் நீ அஞ்சாதே என்று அன்புடை நன்மொழிகளால் ஆறுதல் கூறுவது இன்றியமையாதது; அதனை நீ சொல்லாதிருப்பதுதான் குறை என்பாராய் “இங்கு அஞ்சல் என்று கூறாக்குறை” என்றும், அக்குறை உண்டாதற்குக் காரணம் தனது தவக்குறை என்று சொல்லலுற்று “என் குறை” என்றும், என்னை வருத்துகின்ற இந்தக் குறையை நீக்கும் வகையில் உனது திருவுள்ளக் குறிப்பு இன்னதென்று அறியேன் என்பாராய், “இனி நின் குறிப்பறியேன்” என்றும் வருந்தி உரைக்கின்றார். அம்பிகையின் திருவருள் பெருமையை உள்ளபடி உணராதவர் அறிவில் சிறியராதலின், அவர்களின் நிலைமையை “தேறாச் சிறியர்க்கு அரிதாம்” என்று தெளிவாக உரைக்கின்றார்.
இதன்கண், தெளிந்த அறிவில்லாத சிறியார்க்குப் பெறலரிது அம்பிகையின் திருவருள் ஆயினும், அதன் பெருமை உணர்ந்து நான் வழிப்பட்டேனாயினும், பெருந்துயர் போந்து என்னைத் தங்கண் அழுத்திக் கொண்டபோது, என்னை அஞ்சாதே என்ற ஒரு சொல் சொல்லி ஆதரவு செய்யாமலிப்பது ஒரு பெருங்குறை; ஆனால் அம்பிகையின் திருவுள்ளம் யாதோ தெரியவில்லை என்று முறையிடுகின்றார். (76)
|