1462. எற்றே நிலைஒன்றும் இல்லா
துயங்கும் எனக்கருளச்
சற்றேநின் உள்ளம் திரும்பிலை
யான்செயத் தக்கதென்னே
சொற்றேன் நிறைமறைக் கொம்பேமெய்ஞ்
ஞானச் சுடர்க்கொழுந்தே
மற்றேர் அணியொற்றி வாழ்வே
வடிவுடை மாணிக்கமே.
உரை: வடிவுடை மாணிக்கமாகிய அம்பிகையே, வளமையால் அழகு பொருந்தியிருக்கின்ற திருவொற்றியூர்க்கு நல்வாழ்வு தருகின்ற அருட் செல்வமே, சொற்சுவை நிறைந்த வேத உருவாகிய பூங்கொம்பு போன்றவளே, உண்மை ஞானத்தின் ஒளிமிக்க சுடர்க் கொழுந்தே, என் நிலைமை என்னாவது? ஒரு பற்றுக்கோடுமின்றி வருந்துகின்ற எனக்கு அருள்புரிதற்கு உன் திருவுள்ளம் என் பக்கம் சிறிதும் திரும்பவில்லை; யான் செய்யத்தக்கது வேறு யாது உளது. எ.று.
திருவருள் துணை எய்தாமையால் மனம் கலங்கித் தம்மை எண்ணுகின்றாராதலால் “எற்றே நிலை” என இரங்குகின்றார். தமக்குப் பற்றுக் கோடாய்த் தக்க துணை புரிவாரில்லாமையால் வருந்துகின்ற தமது நிலையை நினைந்து வருந்துகின்றமை தோன்ற “ஒன்றும் இல்லாது உயங்கும் எனக்கு” என்று சொல்கின்றார். இங்ஙனம் உயங்குகின்ற துன்ப நிலை தமக்கு எய்துதற்குக் காரணம் யாதாகலாம் எனச் சிந்தித்து அஃது இது என்பாராய் “எனக்கு அருளச் சற்றே நின் உள்ளம் திரும்பிலை” என்று வெளிப்பட மொழிகின்றார். பராசக்தியாகிய அம்பிகையின் திருவருள் இல்லாதவிடத்துத் தம்மால் செய்யக்கூடியது பிரிது யாதுமில்லை என்பதை நினைந்து செயலற்று வருந்தும் நிலையை, “யான் செயத்தக்கது என்னே” என்று புலப்படுத்துகின்றார். மறைநூல்களில் ஒவ்வொரு சொல்லும் இனிய சுவை நிறைந்து இருப்பது பற்றி, அம்மறைகளின் உருவாய் விளங்கும் வடிவாம்பிகையை “சொற்றேனிறை மறைக்கொம்பு” என்றும், அம்மறை நூல்களில் விளையலாகும் ஞானஒளியாய் அவள் விளங்குவது தோன்ற “மெய்ஞ்ஞானச் சுடர்க் கொழுந்தே” என்றும் போற்றுகின்றார். திருவொற்றியூர்க்கு முழுமுதல் தேவியாய் விளங்குவது பற்றி, “ஏரணியொற்றி வாழ்வே” என்றும் பாடிப் பரவுகின்றார்.
இதன்கண், அம்பிகையின் திருவருள் இல்லாமையால், செய்வகை அறியாமல் வருந்துகிற திறத்தை எடுத்துரைத்து, நீ என் பக்கம் திருள்ளம் செய்யாமையால் செய்யத் தக்கது ஒன்றுமில்லை யெனத் தமது ஆற்றாமையைச் சொல்லி வருந்தியவாறாம். (77)
|