1463. செவ்வேலை வென்றகண் மின்னேநின்
சித்தம் திரும்பிஎனக்
கெவ்வேலை செய்என் றிடினும்அவ்
வேலை இயற்றுவல்காண்
தெவ்வேலை வற்றச்செய் அவ்வேலை
யீன்றொற்றித் தேவர்நெஞ்சை
வல்வேல வார்குழல் மானே
வடிவுடை மாணிக்கமே.
உரை: பகைவர் கூட்டமாகிய கடலை வற்றச் செய்கின்ற அத்துணை ஆற்றல் பெற்ற வேற்படையை முருகனுக்குத் தந்து, ஒற்றியூர் இறைவன் மனத்தை மகிழ்வித்துக் கொண்ட, ஏலம் அணிந்த நீண்ட கூந்தலையுடைய மான் போன்றவளே, வடிவுடை மாணிக்கமாகிய அம்பிகையே, செவ்விய வேல்போன்ற கண்ணையுடைய மின்னலைப் போன்றவளே, உன்னுடைய திருவுள்ளம் என் பக்கம் திரும்பி எனக்கு எத்தகைய வேலையைத் தந்து இதனைச் செய்க என்று கட்டளையிடினும் அவ்வேலையைத் தவறாமல் முடித்து நின் பணிகேட்டு நிற்பேன். எ.று.
மகளிர், கண்களுக்கும் பகைவரைக் குத்தி அவர் குருதி தோய்ந்த வேலை உவமை கூறுவது மரபாதல் பற்றி, “செவ்வேலை வென்ற கண் மின்னே” என்று சிறப்பிக்கின்றார். நீ என்பால் அருள் கூர்ந்து நோக்கி ஒரு வேலையைத் தந்து பணி கொள்வதாயின் அதனைச் சீரிதின் செய்து முடித்து உண்மை அடியவனாவேன் என்பது புலப்பட “உன்சித்தம் திரும்பி எனக்கு எவ்வேலை செய்யென்றிடினும் அவ்வேலை யியற்றுவல் காண்” என்று உரைக்கின்றார். 'செய்யென்று' எவ்வேலையிடினும் என இயைக்க. தெவ்வேலை என்றவிடத்து, வேலை என்பது கடலைக் குறித்து நின்றது. முருகப் பெருமானுக்குச் சக்தி வேலைத் தந்து பகைவரை வென்று மேம்படுக என வழங்கி, சிவபெருமானுடைய உண்மை அன்பைப் பெற்றுக் கொண்டாளாதலால், “அவ்வேலை யீன்று ஒற்றித் தேவர் நெஞ்சைக்” கொண்டாளெனக் கூறுகின்றார்.
இதன்கண், முருகனுக்குச் சக்தி வேல் தந்து செயற்குரிய பணிகளைச் செய்வித்த அம்பிகையின் செயற் பெருமையை எடுத்து ஓதி தன்னையும் அடியேனுக்குப் பணி தந்து ஆட்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டவாறு. (78)
|