1464. தாயே மிகவும் தயவுடை
யாள்எனச் சாற்றுவர்இச்
சேயேன் படுந்துயர் நீக்கஎன்
னேஉளம் செய்திலையே
நாயேன் பிழைஇனி நாடாது
நல்லருள் நல்கவரு
வாயேஎம் ஒற்றி மயிலே
வடிவுடை மாணிக்கமே.
உரை: எம்முடைய திருவொற்றியூரில் எழுந்தருளியிருக்கின்ற மயில் போன்ற வடிவுடை மாணிக்கம் என்ற அம்பிகையே, மிகவும் தயவுடையவள் தாய்தான் என்று சான்றோர் கூறுவர், அங்ஙனம் இருக்க மகனாகிய நான் படும் துன்பத்தை நீக்குவதற்கு ஏனோ திருவுள்ளம் செய்கின்றாய் இல்லை. நாயினேனுடைய குற்றங்களை நாடாமல், இப்போது எனக்கு நல்லருள் செய்ய வந்தருள வேண்டுகிறேன். எ.று.
பெற்ற மக்கள்பால் பெரிய அன்பு செய்வதில் தாயினும் பெரியவர் யாருமில்லை என்று சான்றோர் கூறுவர். எனவே, எல்லா உலகுயிர்களையும் பெற்ற உலகம்மையாகிய உனக்கு நிகராக அருள்புரிபவர் இல்லையாம் என்ற உண்மையை வற்புறுத்துவதற்கு, “தாயே மிகவும் தயவுடையாள் எனச் சாற்றுவர்” என்று உரைக்கின்றார். பெற்ற தாய்க்கும் பிள்ளைக்கும் உள்ள உறவு முறையைப் பொதுப்படக்காட்டி, தாய் தன் பிள்ளைக்குச் செய்யும் பேரருளையும் எடுத்தோதிச் சிறப்பிக்கின்ற வடலூரடிகள், தமக்கும் வடிவாம்பிகைக்குமுள்ள தொடர்பை முன்னிறுத்தி, “இச் சேயேன் படுந்துயர் நீக்க என்னே உளம் செய்திலை” என்று உரைக்கின்றார். அருள் செய்யாமைக்குக் காரணம் தன்னிடத்துள்ள பலவாகிய குற்றங்கள் என்றும், அவற்றை நோக்கினால் அருள்புரிய மனம் வராது
என்றும் எண்ணி “நாயேன் பிழையினி நாடாது நல்லருள் நல்க வருவாயே” என்று வேண்டுகிறார்.
இதன்கண், வடிவாம்பிகை தனக்குத் தாயென்றும், அருள் புரிவதில் தாய்க்கு நிகராவார் ஒருவருமில்லை என்று உலகவர் உரைக்கும் அறத்தை எடுத்தோதி, மகனாயினும் குற்றம் மிக உடையவனாக இருப்பின் அவனிடத்து அன்பு செய்யப் பெற்ற தாய்க்கும் மனம் வராது என்றும், அதனால் தன்னிடத்துள்ள பிழையை நாடாமல் அருள் நல்க வரவேண்டுமென்றும் வடலூரடிகள் வேண்டுகின்றார். (79)
|