1465.

     நானே நினக்கடி யேன்என்
          பிழைகளை நாடியநீ
     தானே எனைவிடில் அந்தோ
          இனிஎவர் தாங்குகின்றோர்
     தேனேநல் வேதத் தெளிவே
          கதிக்குச் செலுநெறியே
     வானேர் பொழில்ஒற்றி மானே
          வடிவுடை மாணிக்கமே.
     

உரை:

      வடிவுடை மாணிக்கமாகிய அம்பிகையே, தேனே, நல்ல வேதங் கூறும் பொருள்களின் தெளிபொருளாக இருப்பவளே, சிவகதிக்குச் செல்ல முயல்வார்க்கு நல்ல நெறி காட்டும் தேவியே, வானளாவிய சோலைகள் சூழ்ந்த திருவொற்றியூரில் இருக்கின்ற மான் போன்ற அன்னையே, நான் உனக்கு அடியவனாவேன், என் பிழைகளை ஆராய்ந்து நீ என்னைக் கைவிடுவாயாயின் ஐயோ என்னைத் தாங்குபவர் யாவரிருக்கின்றார்கள்; அருள்வாயாக. எ.று.

     சிந்திக்கும் உள்ளத்தில் ஞானச் செந்தேன் சுரக்கச் செய்யும் சிவையாதலால் வடிவாம்பிகையைத் “தேனே” என்கின்றார். பல தெய்வங்களைக் குறித்து வேதங்கள் உரைக்கும் இருக்குகள் பலவாயினும், அம்பிகை அருள் நலத்தை உணர்த்துவன மிக்க தெளிவுடையன ஆதலின் “நல்வேதத் தெளிவே” என்று நவில்கின்றார். வேதாந்தமாகிய உபநிடதங்களில் கூறப்படும் சிவகதிக்குரிய நெறிகளை உணர்த்துகின்ற ஞானச் செல்வியாதலின் “கதிக்குச் செல்லும் நெறியே” என்று புகழ்கின்றார். தனக்கும் அம்பிகைக்குமுள்ள தொடர்பைக் காட்டுவதற்கு “நானே நினக் கடியேன்” என்றும், தன்பால் பிழை உண்டாகுமானால் அவற்றை ஆராய்ந்து கண்டு தன்னைக் கைவிட வேண்டிவரின் தன்கதி யாதாகும் என்ற அச்சத்தால் மனம் வருந்தி, தனக்கு அம்பிகையைத் தவிர ஆதரவு செய்யும் அருட்செல்வர் வேறு யாருமில்லை என்பதை உணர்ந்து, “என் பிழைகளை நாடிய நீ தானே எனைவிடில், அந்தோ இனி எவர் தாங்குகின்றோர்” என்று நடுங்கி வருந்துகிறார்.

     இதன்கண், தனக்கு அடியராயினும் பிழையுடையராயின் அது நோக்கி அவர்களை அருளாமல் கைவிடுவது வடிவாம்பிகையின் செயல்வகை என்றும், அம்முறையில் தன்பால் பிழை நாடாமல் அருள வேண்டுமென்றும் இதனால் கேட்டுக் கொள்கின்றார்.

     (80)