1466. கல்லா ரிடத்தில்என் இல்லாமை
சொல்லிக் கலங்கிஇடா
நல்லாண்மை உண்டருள் வல்லாண்மை
உண்டெனின் நல்குவையோ
வல்லார் எவர்கட்கும் வல்லார்
திருவொற்றி வாணரொடு
மல்லார் பொழில்ஒற்றி வாழ்வே
வடிவுடை மாணிக்கமே.
உரை: வல்லவர் என்று சொல்லப்படுபவர்கள் எல்லாரிலும் வல்லவரான. திருவொற்றியூரில் வாழ்பவரான சிவபெருமானோடு வீற்றிருக்கின்றவளும், வளவிய சோலை நிறைந்த திருவொற்றியூரில் வாழ்பவளுமாகிய வடிவுடை மாணிக்கம் என்ற அம்பிகையே, கல்வி அறிவு இல்லாதவரிடத்தில் என்னுடைய வறுமையைச் சொல்லிக் கலக்கமுறாத நல்லாண்மை எனக்குண்டு, அருள்புரியும் வல்லாண்மை உனக்கு உண்டு என்று சொன்னால் நீ எனக்கு அருள் செய்வாயோ? அருளுக. எ.று.
கல்லாதவரிடத்தில் ஒருவர் தமது வறுமையைச் சொல்லி ஆதரவு செய்ய வேண்டுவாராயின் அவர் மறுப்பதோடு இகழ்வதும் செய்வர். அதனால் இல்லாமை சொல்லி இரப்பவர், மனம் புண்பட்டு வருந்துவர். மனத்தின்கண் திண்மையும் ஆண்மையு முடையவர்கள் எவ்வளவு வறுமையுண்டானாலும் கல்லாதவரை நெருங்க மாட்டார்கள். அத்தகைய நல்லாண்மை என்னிடத்தில் உண்டு என்று சொல்லலுற்று. “கல்லாரிடத்தில் என் இல்லாமை சொல்லிக் கலங்கியிடா நல்லாண்மை உண்டு” என்று சொல்லுகின்றார். அருளும் பொருளும் தக்கார்க்குச் செய்வதுதான் தகவுடைமை என்ற கருத்தால், நீயும் தக்கார்க்கே அருளும் சால்பு உடையை என்று உனது உண்மைத்தன்மையை எடுத்துரைப்பாராயின் நீ உனது பேரருளைச் செய்வாயல்லவா என்று சொல்லுவாராய், “அருள் வல்லாண்மை உண்டெனில் நல்குவையோ” என்று முறையிடுகின்றார். ஒப்பாரும் மிக்காரும் இல்லாத வன்மையும் பெருமையும் உடையவர் சிவபெருமான் என்பதுபற்றி “வல்லார் எவர்கட்கும் வல்லார் திருவொற்றிவாணர்” என்று பாராட்டுகின்றார். திருவொற்றியூர் வளம் மிக்கு ஓங்குதற்கு முழு முதலாக விளங்குபவள் வடிவுடை அம்பிகையாதலால் “மல்லார் பொழிலொற்றி வாழ்வே” என்று துதிக்கின்றார்.
இதன்கண், வடிவுடை மாணிக்கமாகிய அம்பிகையின் திருவருளைப் பெற வேண்டுவோர் கல்லாத கீழ்மக்களிடத்தில் தங்களுடைய வறுமையைச் சொல்லி அவர்கள் மறுப்பது கேட்டு மனம்வருந்தும் இயல்பில்லாத திண்ணிய மனமுடையவராக வேண்டுமென்றும், தக்கவர்க்கே அருளுபவள் திருவொற்றியூர் வடிவாம்பிகை யென்றும் தெரிவித்தவாறாம். (81)
|