1467. சுந்தர வாண்முகத் தோகாய்
மறைகள் சொலும்பைங்கிள்ளாய்
சுந்தர வார்குழற் பூவாய்
கருணைக் கடைக்கண்நங்காய்
அந்தர நேரிடைப் பாவாய்
அருள்ஒற்றி அண்ணல்மகிழ்
மந்தர நேர்கொங்கை மங்காய்
வடிவுடை மாணிக்கமே.
உரை: மலை போன்ற கொங்கைகளையுடைய மங்கையாகிய வடிவுடை மாணிக்கமே, அழகிய ஒளிபொருந்திய முகத்தையும் மயில் போன்ற சாயலையும் உடையவளே, வேதங்களைச் சொல்லும் பசுமையான கிளி போன்றவளே, மழை மேகம் போன்ற கூந்தலையுடைய பூவையே, கருணை புரியும் கடைக்கண்களை உடைய நங்கையே, அந்தரமான நேரிய இடையை யுடையயாய், திருவொற்றியூர் இறைவனான சிவன் மகிழ்கின்ற பாவை போன்றவளே, எனக்கு அருள் புரிக. எ.று.
சுந்தரம் - அழகு. தோகை போல்வது பற்றி அம்பிகையைத் 'தோகாய்' என்று ஏத்துகின்றார். நான்காகிய மறைகளைப் பசுங்கிளி போல் ஓதுவது பற்றி “மறைகள் சொல்லும் பைங்கிள்ளாய்” என்று பரவுகின்றார். கந்தரம் - கரிய மேகம். பூவை - நாகணவாய்ப் புள். கருணை புரிகின்ற குளிர்ந்த கட்பார்வையை யுடையவள் என்ற சான்றோர் உரை நோக்கி “கருணைக்கடைக்கண் நங்காய்” என்று களிப்பு மிகுந்து உரைக்கின்றார். மிக நுண்ணிய இடை என்பதற்கு, “அந்தரம் நேர் இடை” என்று சிறப்பிக்கின்றார். மந்தரம் - மலை.
இதன்கண், வடிவுடை மாணிக்கமாகிய அம்பிகையின் திருமுகத்தையும் கருங்குழலையும் கடைக்கண்களையும் நுண்ணிய இடை முதலிய வற்றையும் தனித்தனிப் புகழ்ந்துரைத்து அருள் புரியுமாறு வேண்டுகிறார். (82)
|