1468.

     பத்தர்தம் உள்ளத் திருக்கோயில்
          மேவும் பரம்பரையே
     சுத்தமெய்ஞ் ஞான ஒளிப்பிழம்
          பேசிற் சுகாநந்தமே
     நித்தநின் சீர்சொல எற்கருள்
          வாய்ஒற்றி நின்மலர்உன்
     மத்தர்தம் வாம மயிலே
          வடிவுடை மாணிக்கமே.

உரை:

      பத்தருடைய மனமாகிய திருக்கோயிலில் எழுந்தருளும் மேலான பராசக்தியே, சுத்த மெய்ஞ்ஞானமாகிய ஒளிவடிவமாக இருப்பவளே, ஞான சுகவாழ்வில் பெறலாகும் ஆனந்தமே, திருவொற்றியூரில் எழுந்தருளியிருக்கின்ற நின்மல சிவபிரானும் பிரமகபாலத்தை ஏந்துபவரும் ஆகிய தியாகப்பெருமானுடைய இடப்பாகத்தில் வீற்றிருக்கும் அம்பிகையாகிய வடிவுடை மாணிக்கமே, எப்பொழுதும் நின் புகழையே சொல்லித் துதிக்குமாறு எனக்கு அருளுவாயாக. எ.று.

     பத்தர் - மெய்யன்பர்கள். அவருடைய திருவுள்ளத்தில் எப்பொழுதும் வீற்றிருப்பது பற்றி “பத்தர்தம் உள்ளத் திருக்கோயில் மேவும் அம்பிகையே” என்று துதிக்கின்றார். பரம் - மேன்மை. பரை - பரன் என்பதன் பெண்பால்; சிவன் என்பது சிவை எனப் பெண்பாற் பெயராவது போல. தூய சிவத்தின் திருவருள் ஞான வடிவமாதலின் “சுத்த மெய்ஞ்ஞான ஒளிப் பிழம்பே” என்றும், திருவருள் ஞானம் கைவரப் பெற்றவர்கள் இருக்கும் ஞான வாழ்வில் பெறப்படும் இன்பமாக இலங்குபவளாதலின் அம்பிகையை “சிற் சுகா நந்தமே” என்றும் சிறப்பிக்கின்றார். சிவனை “உன்மத்தர்” என்று சொல்கின்றார் தன்னை வழிபடுபவரைப் பிரிந்து போகாவாறு அன்பினால் பித்தர் ஆக்குவது பற்றி. நாள்தோறும் அம்பிகையை வழி பட்டாலன்றி எண்ணிய பயன் எய்தாதென்பது பற்றி “நித்தம் நின் சீர்சொல்ல எற்கு அருள்வாய்” என்று வேண்டுகிறார்.

      இதனால், நாள்தோறும் அம்பிகையை வழிபடுவார்க்கன்றி எண்ணியவை இறுதிகைவரப் பெறா என்பது வற்புறுத்தவாறாம்.

     (83)