1469. பூவாய் மலர்க்குழல் பூவாய்மெய்
அன்பர் புனைந்ததமிழ்ப்
பாவாய் நிறைந்தபொற் பாவாய்செந்
தேனிற் பகர்மொழியாய்
காவாய் எனஅயன் காவாய்
பவனும் கருதுமலர்
மாவாய் எழில்ஒற்றி வாழ்வே
வடிவுடை மாணிக்கமே.
உரை: அழகிய ஒற்றியூரில் வாழ்கின்ற வடிவுடை மாணிக்கமாகிய அம்பிகையே, பூக்கள் அணிந்த கூந்தலையுடைய பூவையே, மெய்யன்பர்களான ஞானசம்பந்தர் முதலியோர் பாடிய தமிழ்ப் பாட்டுக்களில் நிறைந்த பொற்பாவையே, செந்தேன் போன்ற சொற்களை உடையவளே, காப்பாயாக என நான்முகனும், கற்பகச் சோலையின்கண் இருக்கும் இந்திரனும், உபேந்திரனாகிய திருமாலும் நினைந்து வழிபடும் அழகிய பூவிடத்து, அழகாய் விளங்குகின்றவளே; அருள் புரிக. எ.று.
மங்கலப் பொருளாகிய பூக்கள் அணிந்த கூந்தலையுடையவள் என்றற்கு “பூவாய் மலர்க்குழல் பூவாய்” என்று புகல்கின்றார். மெய்யன்பர் என்பது ஞானசம்பந்தர் முதலிய பெருமக்களை. அவர்கள் பாடிய பாட்டுக்களில் கனிந்துதோன்றும் சுவையே வடிவாம்பிகையின் வடிவாதலின் “தமிழ்ப் பாவாய் நிறைந்த பொற் பாவாய்” என்று போற்றுகின்றார். தேன் போல் இன்பமான சொற்களையே பேசுபவளாதலின் “செந்தேனில் பகர் மொழியாய்” என்கின்றனர். காவாய்பவன் - இந்திரன். இந்திரனைக் கூறவே உபேந்திரனாகிய திருமாலும் கொள்ளப்பட்டது. அலர்மா - பூவொடு கூடிய மரம்.
இதனால், வடிவுடை மாணிக்கமாகிய அம்பிகையை இந்திரன் முதலிய தேவர்கள் பலரும் வழிபட்டு வரம் பெறுவர் என்பது கூறியவாறு. (84)
|