1470.

     தாதா உணவுடை தாதா
          எனப்புல்லர் தம்மிடைப்போய்
     மாதாகம் உற்றவர் வன்நெஞ்சில்
          நின்அடி வைகுங்கொலோ
     காதார் நெடுங்கட் கரும்பேநல்
          ஒற்றிக் கருத்தர்நட
     வாதா ரிடம்வளர் மாதே
          வடிவுடை மாணிக்கமே.

உரை:

      நல்ல ஒற்றியூரில் வீற்றிருக்கின்ற தலைவரும், வாத நடனம் புரிபவருமாகிய சிவபிரானுடைய இடப்பக்கத்தே அமர்ந்து உயர்கின்ற அம்மையே, வடிவாம்பிகையே, அழகிய காதுகளையும் நெடிய கண்களையுமுடைய கரும்பு போன்றவளே, கொடாத அற்பரிடம் போய் வள்ளலே எனக்கு உணவும் உடையும் தருக என்று பேராசையுடன் இரப்பவருடை வன்மையான நெஞ்சின்கண், உன்னுடைய திருவடி பொருந்துமோ? எ.று.

     இயற்கைக் கரும்பினின்றும் வேறு படுத்தற்குக் காதும் கண்ணுமுடைய “கரும்பே” என்று பரவுகின்றார். ஒற்றிநகர்க்கண் வீற்றிருக்கும் சிவபெருமான் அந்நகர்க்குத் தலைவராதலின் “ஒற்றிக் கருத்தர்” என்றும், காளியோடு நடனவகை வாதம் புரிந்து வெற்றி கொண்டவராதலால் “நட வாதார்” என்றும் உரைக்கின்றார். வாதர், வாதார் என நீண்டது. கொடுக்கும் மனமில்லாத கீழ்மக்களை, தாதா எனப் புகழ்வதும், அவர்கள் முன்னே நின்று உணவு தா, உடை தா என்று இரப்பதும் குற்றமாவதோடு அப்படி இரப்பவர் உள்ளத்தில் பேராசை குடி கொண்டிருப்பதும் கண்டு, அவர்களை வன்னெஞ்சர் என்று வடலூரடிகள் பழிக்கின்றார். அந்த வன்னெஞ்சர் மனத்தின்கண் வடிவாம்பிகையின் திருவடி பொருந்துவதில்லை என்றற்கு “அவ்வன்னெஞ்சி னின்னடி வைகுங் கொலோ” என்று வினவுகின்றார்.

     இதன்கண், இரப்பவர்க்குக் கொடாதார் திருவுள்ளத்திலே அன்றி அவர்களை அடைந்து இரப்பவரிடத்திலும் வடிவாம்பிகையின் கருணைத் திருவடி பொருந்தாது என அறிவுறுத்துகின்றார்.

     (85)