1471.

     களந்திரும் பாஇக் கடையேனை
          ஆளக் கருணைகொண்டுன்
     உளந்திரும் பாமைக்கென் செய்கேன்
          துயர்க்கட லூடலைந்தேன்
     குளந்திரும் பாவிழிக் கோமா
          னொடுந்தொண்டர் கூட்டமுற
     வளந்திரும் பாஒற்றி வாழ்வே
          வடிவுடை மாணிக்கமே.

உரை:

      நெற்றியின்கண் அசையாத விழியினையுடைய தலைவனாகிய சிவனோடு, அடியார் கூட்டம் சூழ நிற்ப, வளங் குன்றாத திருவொற்றியூரில் வாழ்கின்ற வடிவுடை மாணிக்கமாகிய அம்பிகையே, குற்றம் பொருந்தியதால் கடைப்பட்ட என்னை ஆட்கொண்டருளுதற்கு உன் திருவுள்ளம் திரும்பாமல் உளது, அதற்கு யான் யாது செய்வேன்; நானோ துயரமாகிய கடலுள் வீழ்ந்து அலைகின்றேன். எ.று.

     குளம் - நெற்றி. சிவனுடைய நெற்றி விழி ஏனை விழிகள் போல இயக்கம் உடைத்தன்றாதலின் “குளம் திரும்பாவிழி” என்று குறிக்கின்றார். எல்லா உலகுயிர்கட்கும் தலைவனாதல் தோன்ற “கோமான்” என்று கூறுகின்றார். சிவனோடு அடியார் கூட்டம் சூழ இருத்தலால் தொண்டர் கூட்டத்தை உடன் கூறினார். களம் - குற்றம்; தம்பால் குற்றங்கள் நிறைந்திருப்பது உணர்ந்து தமது கீழ்மைத் தன்மையைத் தாமே இகழ்ந்து கூறுதலால், “களந்திரும்பா இக் கடையேன்” என்று உரைக்கின்றார். தன்மேல் அன்பு செய்து அடியவனாக ஆட்கொண்டருளுதற்கு காலம் தாமதிப்பது கண்டு வருந்துகின்றமை புலப்பட, “கடையேனை ஆளக் கருணை கொண்டு உளம் திரும்பாமைக்கு என் செய்வேன்” என்று வருந்துகிறார். துன்பக் கடலில் அழுந்தி வருந்துகின்றேன் என்று சொல்லியும் துன்புறுகின்றார்.

      இதன்கண், குற்றங்கள் மிகச் செய்து கடைப்பட்டிருக்கின்ற என்னைக் கருணை புரிந்து ஆட்கொள்ள வேண்டும்; துன்பக் கடலில் கிடந்து உழலுகின்றேன் என்று முறையிட்டவாறாம்.

     (86)