1472. ஆரணம் பூத்த அருட்கோ
மளக்கொடி அந்தரிபூந்
தோரணம் பூத்த எழில்ஒற்றி
யூர்மகிழ் சுந்தரிசற்
காரணம் பூத்த சிவைபார்ப்
பதிநங் கவுரிஎன்னும்
வாரணம் பூத்த தனத்தாய்
வடிவுடை மாணிக்கமே.
உரை: வடிவுடை மாணிக்கமாகிய அம்பிகையே, நீ வேதங்களைத் தந்த அருள்வடிவான கோமளக் கொடி, அந்தர லோகத்தையுடையவள், பூமாலைகளும் மரங்களும் நிறைந்த தோரண வாயிலையுடைய அழகிய ஒற்றியூரில் மகிழ்வுடனிருக்கின்ற அழகியாவாய், சத்தாகிய சிவத்தைக் காரணமாகக் கொண்ட சிவையும் பார்வதியும் ஆவாய். நாங்கள் பரவும் கௌரி என்கிற வாரணத்தின் கொம்பு போன்ற மார்புகளை யுடையளாவாய்; உனக்கு வணக்கம். எ.று.
அருள் காரணமாக வேதங்களை அருளினாள் என்பது விளங்க “ஆரணம் பூத்த அருட் கோமளக் கொடி” என்று கூறுகின்றார். அந்தர லோகத்தையும் உடையவளாதலின் “அந்தரி” என்று போற்றப்படுகின்றாள். தோரணம் - மாலை. வீதிகளிலும் வாயில்களிலும் குறுக்கே கட்டப்படும் மாலைகளுக்குத் தோரணம் என்று பெயர். சர்க்காரிய வாதத்தை மெய்ப்பிக்க தோன்றியவள் என்றற்கு, “சர்க்காரணம் பூத்த சிவை” என்று இயம்புகின்றார். வாரணம், ஆகுபெயரால் யானைக் கொம்பு மேல் நின்றது.
இதன்கண், வடிவுடை மாணிக்கமாகிய அம்பிகையைக் கோமளக் கொடி, அந்தரி, சுந்தரி, சிவை, பார்ப்பதி, கௌரி என்ற பெயர்களால் அருச்சனை புரிகின்றார். (87)
|