1473.

     திருவல்லி ஏத்தும் அபிடேக
          வல்லிஎஞ் சென்னியிடை
     வருவல்லி கற்பக வல்லிஒண்
          பச்சை மணிவல்லிஎம்
     கருவல்லி நீக்கும் கருணாம்
          பகவல்லி கண்கொள்ஒற்றி
     மருவல்லி என்று மறைதேர்
          வடிவுடை மாணிக்கமே.

உரை:

      கண்கள் காணும்படி திருவொற்றியூரில் எழுந்தருளுகின்ற மணங்கமழும் கொடி என்று, வேதங்கள் தெளிந்து உரைக்கின்ற வடிவுடை மாணிக்கமாகிய அம்பிகையே, நீ திருமகள் மகிழ்ந்து பரவும் அபிடேகவல்லி, எங்கள் முடிமிசைத் தோன்றி ஞானமணம் கமழும் கற்பக வல்லி, ஒள்ளிய மரகத மணியாகிய வல்லியும், பிறவியாகிய கொடியை அறுக்கும் கருணை பொழியும் கண்பூத்த கொடியுமாவாய். எ.று.

                    திருவல்லி - திருமகள். சொல்லால் பலரும் பரவத்தக்கவள் என்பதற்கு, “அபிடேகவல்லி” என்று கூறுகின்றார். அடியவர் முடிமேல் பாதத்தைச் சூட்டி அவர்கள் விரும்புவன வழங்கி ஆதரிக்கும் அம்பிகையின் அருள் நலத்தை “சென்னியிடை வருவல்லி கற்பகவல்லி” என்று புகழ்கின்றார். பச்சை நிறங்கொண்டு கொடி போலும் இடையுடன் விளங்குதல் பற்றி, “ஒண் பச்சைமணி வல்லி” என்று பாராட்டுகின்றார். அவளுடைய அருளும் ஞானமும் நிறைந்த கண்பார்வையால் கொடி போல் தொடரும் பிறவி இடையற்றுப் போதலின் “என்கருவல்லி நீக்கும் கருணாம்பக வல்லி” என்று இசைக்கின்றார். கருணாம்பகம் - கருணை பொழியும் கண்கள். கண்கண்ட தெய்வமென உலகவர் உரைக்கும் பொருளுரையை, “கண்கொள் ஒற்றி மருவல்லி” என்று அழகுறக் கட்டுரைக்கின்றார்.

     இதன்கண், வடிவுடை மாணிக்கமாகிய அம்பிகையை, வேதம் உரைக்கும் அம்பிகை என்றும் பிறவித் தொடர்பு அறுக்கும் பெருமாட்டி என்றும், அடியவர் முடிமிசை பாதம் சூட்டிப் பதமுத்தி அளிக்கும் கற்பகவல்லியென்றும், பச்சை மரகதவல்லி யென்றும், திருமகள் பரவும் அபிடேக வல்லி யென்றும் தெளிய உயர்த்தியவாறாம்.

     (88)