1474. உடையென்ன ஒண்புலித் தோல்உடை
யார்கண் டுவக்குமிள
நடையன்ன மேமலர்ப் பொன்முத
லாம்பெண்கள் நாயகமே
படையன்ன நீள்விழி மின்னேர்
இடைப்பொற் பசுங்கிளியே
மடைமன்னு நீர்ஒற்றி வாழ்வே
வடிவுடை மாணிக்கமே.
உரை: மடை வழி நீர் பாயும் ஒற்றியூர் வாழ்வார்க்கு வாழ்வளிக்கும் வடிவுடை மாணிக்க மென்னும் அம்பிகையே, உடையாக ஒள்ளிய புலித்தோலைக் கொண்டணியும் சிவபிரான் கண்டு மகிழும் இளவன்னத்தின் நடையுடையாய், இலக்குமி முதலிய தெய்வப் பெண்கட்கு நாயகமாக விளங்குபவளே, வேற்படை போன்ற நீண்ட விழியையும் மின்னற் கொடிபோலும் இடையையும் உடைய பசிய கிளிபோல்பவளே உன் திருவடிகட்கு வணக்கம். எ.று.
சிவபிரானுக்கு யானைத்தோல் போர்வையும் புலித்தோல் உடையுமாதலால் “உடையென்ன ஒண்புலித் தோல் உடையார்” என்று இயம்புகிறார். வடிவாம்பிகையின் இள அன்னம் போன்ற நடையைக் கண்டு சிவன் மகிழும் திறத்தை, “தோலுடையார் கண்டு உவக்கும் இள அன்னமே” என இசைக்கின்றார். திருமகள் கலைமகள் முதலிய தேவ மகளிரும் பலரும் வணங்கி மகிழும் பெருமையும் உரனும் உடையளாதலின், “பொன்முதலாம் பெண்கள் நாயகமே” எனறு பரவுகின்றார். அம்பிகையின் விழியும் இடையும் முறையே வேலும் மின்னும் போறல் கண்டு “படையன்ன நீள்விழி மின்னேர் இடை” என்று சிறப்பித்துப் “பசுங்கிளியே” என்று பாராட்டுகின்றார்.
இப்பாட்டின்கண், வடிவாம்பிகை உருநலங்களைப் புகழ்ந்து இலக்குமி முதலாய மகளிர்க்கு அவள் நாயகமாய்த் திகழ்வதும் ஓதிப் பரவுகின்றார். (89)
|