1475. கற்பதும் கேட்பதும் எல்லாம்நின்
அற்புதக் கஞ்சமலர்ப்
பொற்பதம் காணும் பொருட்டென
எண்ணுவர் புண்ணியரே
சொற்பத மாய்அவைக் கப்புற
மாய்நின்ற தூய்ச்சுடரே
மற்பதம் சேரொற்றி வாழ்வே
வடிவுடை மாணிக்கமே.
உரை: வளம் பொருந்திய ஒற்றியூர் உள்ளார்க்கு வாழ்முதலாகிய வடிவுடை மாணிக்கமாகிய அம்பிகையே! சொல் உலகமாகியும் அவற்றிற்கு அப்பாலாகியும் இருக்கின்ற தூய ஞானச்சுடர் ஒளியே, கற்பதும் கற்றார்பால் அடைந்து கேட்கத் தகுவன கேட்பதும் எல்லாம் உன்னுடைய அற்புதமான தாமரை போன்ற அழகிய திருவடியைக் காணும் பொருட்டே என்று சிவ புண்ணியவான்கள் அனைவரும் எண்ணுகின்றார்கள். அவர்களைப் பின்பற்றி எண்ணும் அடியேனுக்கும் அருளுக. எ.று.
கற்பார் கற்பதும் கற்றாரை அடைந்து கேட்பதுமெல்லாம் அம்பிகையின் திருவடி அடைந்து அயர்வில் இன்பம் பெறுவதன் பொருட்டே என்பது சைவநூல்களின் துணிபாதலால், “கற்பதும் கேட்பதும் எல்லாம் நின் அற்புதக் கஞ்சமலர்ப் பொற்பதம் காணும் பொருட்டே என எண்ணுவர் புண்ணியர்” என்று புகல்கின்றார். சைவ நூல்களைக் கற்பதும் கேட்பதும் சிவபுண்ணிய மாதலால், அவர்களைப் புண்ணியர் என்று போற்றுகின்றார். இறைவன் படைத்த இவ்வுலகம் சொற்பிரபஞ்சம் பொருட்பிரபஞ்சம் என இரண்டாதலால், இரண்டுக்கும் அப்பாற்பட்ட சிவபதத்தில் சிவஞான ஒளியாய்த் திகழ்வதுபற்றி வடிவாம்பிகையை “சொற்பதமாய் அவைக்கு அப்புறமாய் நின்ற தூய்ச்சுடரே” என்று சொல்லுகின்றார். களங்கமற்ற ஞான ஒளியாதல் பற்றி, அம்பிகையின் ஞான ஒளியைத் “தூய்ச்சுடர்“ என்று சொல்லுகின்றார்.
இதன்கண், சைவ நூற் கல்வி கேள்வி வல்ல சிவபுண்ணியர் அனைவரும் அம்பிகையின் திருவடியைக் காண்டற் பொருட்டே ஞான பூசை செய்கின்றனர் என்ற கருத்து வற்புறுத்தப்படுகிறது. (90)
|