1476. நின்னால் எனக்குள எல்லா
நலனும் நினைஅடைந்த
என்னால் உனக்குள தென்னைகண்
டாய்எமை ஈன்றவளே
முன்னால் வருக்கருள் ஒற்றிஎம்
மான்கண் முழுமணியே
மன்னான் மறையின் முடிவே
வடிவுடை மாணிக்கமே.
உரை: முன்னொரு கால் சனகர் முதலிய முனிவர் நால்வருக்கு அறம் உரைத்தருளிய எங்கள் பெருமான் ஆகிய சிவனுடைய கண்ணில் உள்ள முழுத்த மணி போன்றவளே, நிலைபெற்ற நான்காகிய வேதங்களின் முடிவாக இருப்பவளே, வடிவுடை மாணிக்கமாகிய அம்பிகையே, உன்னால் எனக்கு எல்லாவகை நலன்களும் உள்ளன; உன்னை அடைந்த என்னால் உனக்கு என்ன பயன்? எம்மை ஈன்றவளாகிய தாயே, எனக்கு அருள் செய்க. எ.று.
வேத வேதாந்தங்களாகிய ஞான நூல்களில் மிக வல்லவராக விளங்கிய சனகர் முதலிய நால்வரும், வேதாந்த நூல்களில் உண்டான சந்தேகங்களை நீக்கிக்கொள்ள மாட்டாதவராய், தேவ தேவர்கள் அனைவரையும் வேண்டி முயன்றும் உண்மை தெளிய முடியாமல், சிவ பெருமானை அடைந்து விண்ணப்பம் செய்ய, அவர் கயிலையில் ஒரு கல்லால மரத்தின் கீழிருந்து உண்மைப் பொருளை உபதேசித்த வரலாற்றை நினைவில் கொண்டு, “முன் நால்வருக்கு அருள் ஒற்றி எம்மான்” என்று உரைக்கின்றார். சிவபெருமானுடைய கண்ணில் ஒளிர் மணிபோல் சிவபெருமானுக்கு இனியளாய் இருப்பதுபற்றி “எம்மான்கண் முழு மணியே” என்று பாராட்டுகின்றார். வேதங்கள் தோன்றிப் பல நூற்றாண்டுகளாயினும் மக்களால் ஓதப்படுவது பற்றி, வேதங்களை “மன் நான் மறை” என்றும், அவ்வேதங்களின் முடிபொருள் அம்பிகையே ஆதல்பற்றி “மறையின் முடிவே வடிவுடை மாணிக்கமே” என்றும் கூறுகின்றார். உலக உயிர்கள் அத்தனையும் பெற்றுப் புரந்தரும் தாயாதல் தோன்ற “எமை ஈன்றவளே” என்று பரவுகின்றார். உலக மாதேவியாகிய அம்பிகையால், உலகிலுள்ள எல்லா உயிர்களுக்கும் அம்பிகையைப் பாடி வழிபடும் தனக்கும் எல்லா நலன்களும் உண்டாவது கண்டு, அன்னையே நின்னால் எனக்கு எல்லா நலனும் உளவாகின்றன; என்னால் என்ன பயன் உளது என்று அறிய முடியவில்லை என்பாராய், “நின்னால் எனக்குள எல்லா நலனும் நினை அடைந்த என்னால் உனக்கு உளது என்னை” என்று முறையிடுகின்றார்.
இதன்கண் திருவொற்றியூர் வடிவுடை மாணிக்கமாகிய அம்பிகையால் உயிர்களுக்கு எல்லா நலன்களும் உண்டு. ஆனால் அவளையடைந்து அருள் பெறும் உயிர்களால் அவளுக்குப் பயன் ஒன்றுமில்லை. பயன் கருதாமலே உலகுயிர்களுக்கு அம்பிகை எல்லா நலன்களையும் செய்கின்றாள் என்பதாம். (91)
|