1477. நன்றே சிவநெறி நாடுமெய்த்
தொண்டர்க்கு நன்மைசெய்து
நின்றேநின் சேவடிக் குற்றேவல்
செய்ய நினைத்தனன்ஈ
தென்றே முடிகுவ தின்றே
முடியில் இனிதுகண்டாய்
மன்றேர் எழில்ஒற்றி வாழ்வே
வடிவுடை மாணிக்கமே.
உரை: நடன சபை கொண்டு விளங்கும் அழகிய ஒற்றியூர்க்கு வாழ்வு தரும் தெய்வமே, வடிவுடை மாணிக்கமாகிய அம்பிகையே, நலம் பயப்பதாகிய சிவ நெறியை நாடுகின்ற சிவனடியார்கட்கு நல்லன செய்து அந்நெறிக்கண்னே நின்று நின் திருவடிக்குக் குற்றேவல் செய்ய நினைக்கின்றேன். என் விருப்பமாகிய இது எப்பொழுது நிறைவேறும்? இப்பொழுதே கைகூடுவதாயின் மிக்க நன்மையாம். எ.று. சிவனுறையும் கோயில் தோறும் கூத்தப் பிரானுடைய காட்சி நல்கும் அம்பலம் இன்றியமையாது உளதாகலின் “மன்றேர் எழில் ஒற்றி” என்று எடுத்துரைக்கின்றார். சிவநெறிக்கண் நின்று சிவானந்தத்தைப் பெற்று மகிழ்கின்றாராதலின் “நன்றே சிவநெறி” என்றும், அதனை விரும்பி, சிவஞானச் சைவ ஒழுக்கம் மேற்கொண்டு மனம் மொழி மெய்களால் தூயதொண்டு செய்து மேம்படுகின்ற சிவஞானிகளை “சிவநெறி நாடும் மெய்த்தொண்டர்” என்றும் பரிந்துரைக்கின்றார். அவர்கட்கு உண்ண உணவும் உடுக்க உடையும் நோய்க்கு மருந்தும் அன்போடு நாடிச் செய்து அந்நெறியிலேயே ஊன்றி நிற்பது சிவத்தொண்டு ஆதலால் “நன்மை செய்து நின்றே நின் சேவடிக் குற்றேவல் செய்ய நினைத்தனன்” என்று விண்ணப்பிக்கின்றார். நினைத்தது நற்செயலே ஆயினும், வறுமை சிறுமைகளால் இடையூறு படா வண்ணம் நடைபெறுதற்குத் திருவருள் துணை வேண்டுதலின் “ஈது என்றே முடிகுவது” என்றும், பின்னர் எய்த இருக்கும் நலன் தீங்குகளை முன்னறிதல் கூடாமையின் “நின்றே முடியில் இனிது கண்டாய்” என்றும் இயம்புகின்றார்.
இதன்கண், அம்பிகையிடத்தே விண்ணப்பம் செய்யும் வடலூரடிகள் சிவநெறிக்கண் நின்று சிவத்தொண்டர்க்கு நல்லன செய்து சிவநெறி வழுவாது ஒழுகுதற்கு அருள் புரிய வேண்டுமென கேட்கின்றாராம். (92)
|