1478. அத்தனை ஒற்றிக் கிறைவனை
அம்பலத் தாடுகின்ற
முத்தனைச் சேர்ந்தஒண் முத்தே
மதிய முகவமுதே
இத்தனை என்றள வேலாத
குற்றம் இழைத்திடும்இம்
மத்தனை ஆளல் வழக்கோ
வடிவுடை மாணிக்கமே.
உரை: வடிவுடை மாணிக்கமாகிய அம்பிகையே, அத்தனாகிய சிவனும், திருவொற்றியூர்க்கு இறைவனும், அம்பலத்தாடுகின்ற முத்தனுமாகிய சிவபெருமானிடத்து சேர்ந்துள்ள ஒள்ளிய முத்துப் பொன்றவளே, மதி போன்ற முகத்தையுடைய தேவாமுதமாக இருப்பவளே, இத்துணை தான் என்று வரையறுத்து அளவிடமுடியாத குற்றங்களைச் செய்திடும் பித்துக் கொள்ளியாகிய என்னை, உனக்கு ஆளாகக் கொள்ளுதல் முறையாகுமோ, மொழிந்தருளுக. எ.று.
எல்லா உயிர்கட்கும் அம்மையப்பனாக இருப்பவனாதலின், சிவ பெருமானை 'அத்தன்' என்று சொல்கிறார், ஞானநூல் ஓதுவித்தலும் ஞானம் அருள்தலும்பற்றிச் சிவனை “ஆப்தன்” என்று சொல்லுவது உண்மை பற்றி, ஆப்தன் என்பதன் திரிபாகக் கொண்டு 'அத்தன்' என்றார் என்பதுமுண்டு. திருவொற்றியூரில் கோயில் கொண்டிருப்பது பற்றி “ஒற்றிக்கிறைவன்” என்று உவந்துரைக்கின்றார். அம்பலத்தில் சிவபெருமான் ஆடுகின்ற திருக்கூத்து உயிர்களை மலப்பிணிப்பினின்றும் நீக்கி முத்தி பெறுவிப்பது கருத்தாக நிகழ்வதாதலின், “அம்பலத்தாடுகின்ற முத்தன்” என்று மொழிகின்றார். சிவபெருமானுடைய சகளத் திருமேனியில் இருகூறு ஒன்றாய் இசைந்திருத்தலின் “முத்தனைச் சேர்ந்த வொண் முத்தே” என்று குறிக்கின்றார். முத்தன் என்பது முத்தையுடையவன் என்றும் பொருள் தருதலின் சிவன்பால் உள்ள முத்து யாது? என்று எழும் வினாவுக்கு விடை கூறுவார்போல அம்பிகையை “பசு முத்தாக்கி முத்தனைச் சேர்ந்த வொண் முத்தே” என்றார் எனினும் அமையும். அம்பிகையை மதிய முகமுடையாய் என்று புகழ்தலால், மதியிடத்தே மது உண்டே அம்பிகையின் திருமுகத்தில் உளது யாது என்பார்க்கு கருணையாகிய அமுதம் நிறைந்துளது என்பாராய், “மதிய முகவமுதே” என்று மனமகிழ்ந்து பாடுகின்றார். இங்ஙனம் அம்பிகையின் குணநலன்களை எண்ணி வியந்து புகழும் வடலூரடிகள் தமது குணநலன்களை நோக்குகின்றார். எண்ணிறந்த குற்றங்கள் தோன்றக் கண்டு இத்தனையென்று அளவேறாத குற்றமிழைத்திடும் “இம்மத்தனை” என்று தம்மைப் பழித்துரைக்கின்றார். மிகப் பல குற்றங்கள் செய்தும் தெளிவுறாது மயக்கம் மிகுந்து, எண்ணற்கரிய குற்றங்களைச் செய்ததை எண்ணித் தன்னை “மத்தன்” என்று குறை கூறுகின்றார். மத்தன் - அறிவு தெளிவின்றிப் பித்தேறியவன். தெளிந்த அறிவுடையோர்களை ஆட்கொள்வது முறையாகவும் அருள் வழக்காகவும் இருக்க, மத்தனாகிய தன்னை ஆட்கொள்ள இடமில்லையே என்று என்று வருந்துவார் “ஆட்கொளல் வழக்கோ” என்று ஐயுறுகிறார்.
இதன்கண், அளவு இறந்த குற்றங்களைச் செய்து கடைப்பட்ட தன்னை அம்பிகையின் திருவருட் புகழைப் பாடுவதில் ஈடுபடுத்திய திருவருளை வியந்து தெளிவின்றி பித்தேறிக் குற்றம் பல செய்து கீழ்ப்பட்ட தம்மை அம்பிகை ஆட்கொண்டது பற்றி வியந்து கூறுகின்றாராம். (93)
|