1479.

     கூறாத வாழ்க்கைச் சிறுமையை
          நோக்கிக் குறித்திடும்என்
     தேறாத விண்ணப்பம் சற்றேனும்
          நின்றன் திருச்செவியில்
     ஏறாத வண்ணம்என் ஒற்றித்
          தியாகர் இடப்புறத்தின்
     மாறா தமர்ந்த மயிலே
          வடிவுடை மாணிக்கமே.

உரை:

      திருவொற்றியூரில் தியாகப் பெருமானுடைய இடப்புறத்தில் நீக்கமின்றி அமர்ந்திருக்கும் மயில்போன்ற வடிவுடை மாணிக்கமாகிய அம்பிகையே, வாய்விட்டுரைக்க முடியாத என் வாழ்வின் சிறுமையை எண்ணிக் குறிப்பிட்டு உரைக்கும் தெளிவில்லாத எளியேனுடைய விண்ணப்பம் நின்னுடைய திருச்செவியில் சிறிதும் ஏறாத வண்ணம் என்னையோ, கூறுக. எ.று.

     சிவனுடைய திருமேனியில் இடப்பகுதி அம்பிகையின் கூறாகத் திகழ்வது பற்றி “ஒற்றித் தியாகர் இடப்புறத்தில் மாறாது அமர்ந்த மயிலே” என்று மகிழ்ந்துரைக்கின்றார். குற்றம் குறைகள் நிறைந்து நோயும் துன்பமும் மலிந்து இத்தகையது என எடுத்துரைக்கலாகாதபடி மெலிவுற்றிருப்பது தோன்ற “கூறாத வாழ்க்கைச் சிறுமையை நோக்கி” என்றும், சிறுமையை நோக்கிநோக்கி அறிவு பேதுற்றுத் தெளிவில்லாத சொற்களைத் தொடுத்துச் செய்யும் தமது விண்ணப்பத்தை எண்ணிப் பார்த்து வருந்தக் கூறுதல் தோன்றக் “குறித்திடுமென்றேறாத விண்ணப்பம்” என்கிறார். அதனுடைய சொல்லும் பொருளும் அருவருப்பு விளைவித்தல் பற்றி வடிவாம்பிகை தன் திருச்செவியில் ஏறாது மறுத்தமை யெண்ணி, “நின் திருச்செவியில் ஏறாத வண்ணம் என்” என்று வேண்டுகின்றார்.

     இதன்கண், வாழ்க்கையில் தோன்றிய சிறுமையால் அறிவின் தெளிவுடைமை இழந்து, கலங்கிய மொழிகளால் செய்து கொண்டமையால், அம்பிகையின் திருச் செவியில் தம் விண்ணப்பம் ஏறாதாயிற்று என்று எண்ணி அமைகின்றார்.

     (94)