148. குன்று பொய்யுடல் வாழ்வினை மெய்யெனக்
குறித்திவ ணலைகின்றேன்
இன்று நின்திரு வருளடைந் துய்வனோ
இல்லையிவ் வுலகத்தே
என்று மிப்படிப் பிறந்திறந் துழல்வனோ
யாதுமிங் கறிகில்லேன்
நன்று நின்றிருச் சித்தமென் பாக்கியம்
நற்றணிகையிற் றேவே.
உரை: நல்ல தணிகை மலையில் எழுந்தருளும் தேவனே, நாளும் வலி குறையும் பொய்யான உலக வாழ்வை மெய்யென்று கருதி இங்கே அலைகின்ற யான் இப்பொழுது நின்னுடைய திருவருளைப் பெற்று உய்தி பெறுவேனோ, இல்லையேல் இவ்வுலகத்தில் எப்போதும் இவ்வாறே பிறந்தும் இறந்தும் வருந்துவேனோ? ஒன்றையும் யான் அறியேன்; நல்லது; நின் திருவுளமே எனக்குச் செல்வப்பேறு எனக் கொள்கின்றேன். எ. று.
குன்று வாழ்வு எனவும், பொய்யுடல் வாழ்வு எனவும் இயையும். குன்றுதல் - வலி குறைதல். நாளுக்கு நாள் நலம் மாறிச்சென்று தேய்ந்தொழிதலால், “பொய்யுடல் வாழ்வு” எனவும், பொய்யை மெய்யெனக் கொள்வோர் துன்புறல் இயல்பாதலால், “மெய்யெனக் குறித்திவண் அலைகின்றேன்” எனவும் உரைக்கின்றார். மெய்யெனக் கருதி நிலைபெறுவித்தற்கு ஆவன தேடியலைவது புலப்பட “அலைகின்றேன்” என்ற சொல் நிற்கின்றது. இவண்-இவ்வுலகு. இன்று என்பது இப்பிறப்பைக் குறிப்பது. திருவருள் ஞானம் வீடு பேற்றுக்குக் காரணமாதலால், “இன்று நின் திருவரு ளடைந்து உய்வனோ” என வினவுகிறார். இல்லை, ஈண்டு இல்லை யெனின் என நின்றது. “பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்” (மணிமே) எனப் பிறரும் கூறுவர். பிறந்தவர் - இறந்தே கழிதலால் “இப்படிப் பிறந்திறந் துழல்வனோ” எனக் கேட்கிறார். சிற்றறிவும் சிறுதொழிலும் உடையவாகலின் உயிர்கள் தமக்குப் பின்னிகழ்வதை முன்னறிதல் கூடாமை பற்றித் “திருவருள் அடைந்துய்வனோ” “பிறந்திறந் துழல்வனோ” என வேண்டுகிறார். தமது அறிவால் உணர மாட்டாமை பற்றி “யாதும் இங்கு அறிகில்லேன்” என்று உரைக்கின்றார். நின் சித்தம் என் பாக்கியம் என்பது மாட்டாதாரிடையே வழங்கும் பழமொழி.
இதனாற் பிறப்பினின்றும் உய்திப் பேறு நினைந்து முறையிட்டவாறு காணலாம். (8)
|