1480.

     ஓயா இடர்கொண் டுலைவேனுக்
          கன்பர்க் குதவுதல்போல்
     ஈயா விடினும்ஓர் எள்ளள
          வேனும் இரங்குகண்டாய்
     சாயா அருள்தரும் தாயே
          எழில்ஒற்றித் தற்பரையே
     மாயா நலம்அருள் வாழ்வே
          வடிவுடை மாணிக்கமே.

உரை:

      கெடாத திருவருளைச் செய்யும் தாயும், அழகிய ஒற்றியூர்க்கண் எழுந்தருளும் தற்பரையும், குன்றாத நலம்தரும் வாழ்முதலும் ஆகிய வடிவுடை மாணிக்கமாகிய அம்பிகையே, இடைவிடாத துன்பமுற்று வருந்துகின்ற எனக்கு, உன்னுடைய அன்பர்க்கு நீ உதவுவது போல உன் திருவருளை எனக்கு நல்காவிடினும், எள்ளளவேனும் இரங்குவாயாக. எ.று.       வடிவாம்பிகை அருளும் திருவருளின் நலம் எவ்வகையாலும் கெடுவதில்லை யாதலால், “சாயா அருள் தரும் தாயே” என்றும், ஒற்றித் தியாகப் பெருமானாகிய தற்பரனுக்குத் தேவியாதலின், 'தற்பரை' யென்றும், அம்பிகையின் அருள் நலம் பெற்ற வாழ்வுடையார்க்கு இன்பநிலை அழிவதில்லை ஆதலால், “மாயா நலமருள் வாழ்வே” என்றும் உரைக்கின்றார். கடல் அலைபோல் உலக வாழ்வில் மக்களுக்குத் துன்பங்கள் ஒழிவின்றி வந்து தாக்குதலால் “ஓயா விடர் கொண்டு உலைவேனுக்கு” என்றும், அன்பர்க்கு உதவுவதில் அம்பிகையின் அருட் செல்வம் தங்கு தடையின்றிப் பெருகிய வண்ணம் இருப்பதால், அதனை உவமையின்கண் வைத்து “அன்பர்க்கு உதவுதல் போல் ஈயாவிடினும்” என்றும், தமக்கு மிகச்சிறியதாய் அளவாய் அந்த அருள் நலம் வேண்டுமென்பதற்கு “எள்ளளவேனும் இரங்கு கண்டாய்” என்றும் வேண்டுகிறார்.

      இதன்கண், அம்பிகையின் திருவருள் பெற்ற வாழ்வு சாயாத் தன்மையும் மாயா நலமும் உடையதென விதந்துரைத்து, தனக்கு அந்த அருள்நலத்தில் எள்ளளவும் தரினும் அமையும் என்று முறையிடுகின்றார்.

     (95)