1481.

     பெரும்பேதை யேன்சிறு வாழ்க்கைத்
          துயர்எனும் பேரலையில்
     துரும்பே எனஅலை கின்றேன்
          புணைநின் துணைப்பதமே
     கரும்பே கருணைக் கடலே
          அருண்முக் கனிநறவே
     வரும்பேர் அருள்ஒற்றி வாழ்வே
          வடிவுடை மாணிக்கமே.

உரை:

      கரும்பு போன்று இனிமையும் கடல் போன்ற கருணையும் முக்கனியின் தேன்போலும் அருளும் உடையவளும், பேரரருள் நிலவும் திருவொற்றியூர் வாழ்வரசியும் ஆகிய வடிவாம்பிகையே, பெரும் பேதையாகிய என்னுடைய சிறுமை நிறைந்த வாழ்க்கையில் உண்டாகும் துயரம் என்கிற பெரிய அலைகள் நிறைந்த கடலில் அகப்பட்ட துரும்பு போல அலைகின்றேன். உன்னுடைய இரண்டு திருவடிகளே துன்பக் கடலிலிருந்து கரையேறுவதற்குத் தெப்பமாம். எ.று.

     இனிமை தாங்கிய அருட் பெண்மை வடிவு கொண்டு எழுந்தருளுகிறாள்; ஆதலால் வடிவுடை மாணிக்கமாகிய அம்பிகையைக் “கரும்பே” என்றும், “கருணைக் கடலே” என்றும் கூறுகின்றார். அவளுடைய திருவடியைச் சிந்திக்கும் போதெல்லாம் தெய்வச் செந்தேன் சுரந்து இனிமை செய்தலால், “அருள் முக்கனி நறவே” என்று துதிக்கின்றார். ஒற்றியூர்க்கண் வாழ்வார்க்கு அருள் தந்து வாழ்வு வளம்பெறச் செய்தலால் “வரும் பேரருள் ஒற்றி வாழ்வே” என்று வாயால் வாழ்த்துகின்றார். அம்பிகையின் திருவருள் தனக்கு உண்டாக வேண்டுமென விரும்புகின்றவர், தனக்கு வாழ்விடை உண்டாகும் துன்பத்தைப் போக்குதல் வேண்டி, அலைகடலில் துரும்பு போல் தமது நிலைமை இருக்கிறதெனத் தெரிவித்து யான் வேண்டுவன பொன்னும் பொருளும் போகமுமல்ல; அம்பிகையின் இரண்டாகிய திருவடிகளே என்றும், பிறவிக்கடலைக்கடந்து கரையேறுதற்கு அத் திருவடிகள் தெப்பமாம் என்றும் முறையிடலுற்று “புணை நின் துணைப் பதமே” என்று புகழ்கின்றார்.

      இதன்கண், பிறவிக்கடலுக்குத் தெப்பமாவது அம்பிகையின் திருவடித்துணையே யென்று வற்புறுத்துகின்றார்.

     (96)