1482.

     காதர வால்உட் கலங்கிநின்
          றேன்நின் கடைக்கண்அருள்
     ஆதர வால்மகிழ் கின்றேன்
          இனிஉன் அடைக்கலமே
     சீதரன் ஏத்தும் திருவொற்றி
          நாதர்தம் தேவிஎழில்
     மாதர சேஒற்றி வாழ்வே
          வடிவுடை மாணிக்கமே.

உரை:

      திருமால் வணங்கி வழிபடுகின்ற திருவொற்றியூர்த் தலைவராகிய சிவபெருமானுடைய தேவியும் அழகிய பெண்ணரசியும் ஒற்றியூர் வாழ்வார்க்கு வாழ்வளிக்கும் அம்மையுமாகிய வடிவுடை மாணிக்கமாகிய அம்பிகையே, வெறுப்புணர்ச்சியால் மனம் கலங்கி வருந்தி நிற்கின்ற எனக்கு உன் அருள்நிறைந்த அன்புப்பார்வையால் உண்டாகும் ஆதரவால் மகிழ்ச்சி கொண்டு நின்றேன். இனி நான் உனக்கு அடைக்கலம். ஆதலால் நீ என்னை ஆதரிப்பது கடனாகும். எ.று.

     ஆதரம் என்பதற்கு எதிர்மொழி காதரம். இவற்றை ஆதரவு என்றும், காதரவு என்று வழங்குவதுண்டு. சிலரையும் சிலவற்றையும் கண்டதும் வெறுப்புக் கொள்வதும் சிலர்க்கு வாழ்க்கைச் சூழலில் பிறவிப் பண்புபோல் தோன்றுகின்றன. அதனால் அவர்களில் காதரப் பண்புடையோர் துன்புறுதலும், ஆதரப்பண்பினர் இன்பமாக வாழ்தலும் நிகழ்கின்றன. காதரப் பண்பால் துன்புறுவோரையும் ஆதரத்தால் இன்புடையோரையும் கண்டு உரைக்கின்றாராதலால் “காதரவால் உள் கலங்கி நின்றேன்” என்று உரைக்கின்றார். பிறிதோரிடத்தும் “துனியால் உளம் தளர்ந்து அந்தோ துரும்பின் சுழலுகின்றேன்” என்று அடிகளார் உரைக்கின்றார். இன்ப வாழ்வுக்கு ஏதுவாகிய ஆதரப்பண்பு உள்ளத்தெழுந்து மலர்தற்கு அம்பிகையின் திருவருள் காரணம் என்றும், காதரத் துன்பத்துக்கு அருளின்மை காரணமென்றும் கருதுகின்றாராதலால், “கடைக்கண் அருளாதரவால் மகிழ்கின்றேன்” என்று தெரிவித்தருளுகின்றார். சீதரன் - திருமால்; திருவொற்றியூர்க்கு வந்து சிவனை வழிபட்டு வரம் பெற்றார் என்று தல புராணம் உரைத்தலால் “சீதரனேத்துந் திருவொற்றி நாதர்” என்று புகழ்கின்றார். பெண்ணுலகுக்கே பேரரசியாகத் திகழ்பவள் உமாதேவி யாதலால் “எழில் மாதரசே” என்றும், திருவொற்றியூர் வாழ்வார்க்கு தனது அருள்நோக்கால் இன்ப வாழ்வு அருளுவது பற்றி “ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே” என்றும் வடலூரடிகள் உரைக்கின்றார்.

     இதன்கண், மக்கட்கு தாம் வாழும் சூழலால் விருப்பு வெறுப்புணர்ச்சிகள் உளவாகின்றன என்றும், அவற்றிற்கு ஏது அம்பிகையின் அருட்பேறும் இன்மையும் என்பதும் உணர்த்தி, அவளது அருள் பெற்றவர் அடைக்கலமாவதன்றி வேறு செயலில்லை என்பது வற்புறுத்தப்படுகிறது.

     (97)