1483.

     பொன்னுடை யார்அன்றிப் போற்றுநற்
          கல்விப் பொருளுடையார்
     என்னுடை யார்என ஏசுகின்
          றார்இஃ தென்னைஅன்னே
     மின்னுடை யாய்மின்னில் துன்னிடை
          யாய்ஒற்றி மேவுமுக்கண்
     மன்னுடை யாய்என் னுடையாய்
          வடிவுடை மாணிக்கமே.

உரை:

      அன்னையே, மின்னலைப் போல் ஒளியுடையவளே, மின்னற் கொடிபோன்று நுண்ணிய இடையை யுடையவளே, ஒற்றியூரில் எழுந்தருளுகின்ற மூன்று கண்களையுடைய தலைவரை உடையவளே, என்னை அடிமையாகக் கொண்டவளே வடிவுடை மாணிக்கமாகிய அம்பிகையே! பொன்னும் பொருளுமாகிய செல்வமுடையவரேயன்றி எல்லாராலும் உயர்வாகப் புகழப்படுகின்ற கல்வியாகிய செல்வமுடையவர் எத்துணை பெரிது உடையராயினும், என்ன உடையவர்கள் என்று உலகவர் இகழ்கின்றார்கள். இஃது என்னே! எ.று.

     எல்லா உயிர்கட்கும் தாயாதல் பற்றி அம்பிகையை “அன்னே” என்று போற்றுகின்றார். மின்னல் போலும் ஒளியும் உடையும் உடையவளாதலால் “மின்னுடையாய்” என்றும், மின்னற் கொடிபோல் மிக நுண்ணிய இடையை யுடையவளாதலால் “மின்னில் துன்னிடையாய்” என்றும், மூன்று கண்களையுடைய சிவபெருமானைத் தனக்கு நாயகனாகக் கொண்டவளாதலால் “முக்கண் மன்னுடையாய்” என்றும், தான் அம்பிகையின் திருவடியைப் புகலிடமாகக் கொண்டமையால் “என்னுடையாய்” என்றும் பாராட்டுகின்றார். உலகில் மக்கள் பொன்னும் பொருளும் உடையவரையே செல்வரென்று சொல்லிச் சிறப்புச் செய்வதும், கடல் போன்ற கல்வியுடையவராயினும் அவரைச் செல்வராகக் கருதாமல் ஒழிவதோடு இகழ்வதும் செய்கின்றார்கள். இதைக் கண்டு வியப்புற்ற வடலூர் அடிகளார், “பொன்னுடையாரன்றிப் போற்றும் நற்கல்விப் பொருளுடையார் என்னுடையாரென என ஏசுகின்றார்” என்றும், இது மிகவும் வியப்பு தருவதுபற்றி “இஃது என்னை” என்றும் வினவுகின்றார். திருவள்ளுவரும் 'இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு' என உரைக்கின்றார். திருவள்ளுவர் காலத்தில்தான் அது நிலையென்றால் தம்முடைய காலத்திலும் அதே நிலை இருப்பதைக் கண்டு வியந்துரைக்கின்றார் ஆதலால், “இஃது என்னை” என்று உரைக்கின்றார்.

      இதன்கண், சிறப்புடைய கல்விச் செல்வமிருக்கத் தேய்ந்து கெடும் பொருளைப் பொருளாகக் கருதுகிற உலகியலை எடுத்தோதி நல்லறிவு பரவ வேண்டுமென இறைவனை வேண்டுகிறார்.

     (98)