1485. நேயானு கூல மனமுடை
யாய்இனி நீயும்என்றன்
தாயாகில் யான்உன் தனையனும்
ஆகில்என் தன்உளத்தில்
ஓயா துறுந்துயர் எல்லாம்
தவிர்த்தருள் ஒற்றியில்செவ்
வாயார் அமுத வடிவே
வடிவுடை மாணிக்கமே.
உரை: திருவொற்றியூரில் வீற்றிருந்தருளும், சிவந்த திருவாயில் ஞானவமுதம் பொழியும் அருள்வடிவான வடிவுடை மாணிக்கமென்ற அம்பிகையே! அன்பும் துணைபுரியும் மனமுடையவளே, நீ எனக்குத் தாயாகில், எளியனாகிய யான் உனக்கு மகனாகில், நீ என் மனத்தில் இடையறாமல் நின்று வருத்தும் துயரங்களெல்லாவற்றையும் போக்கியளுக. எ.று.
நேயம் - அன்பு. அனுகூலம் - துணையாதல். உலகுயிர்களிடத்து அன்பும் அவற்றின் அறிவு செயல்கட்கு வேண்டிய உணர்வும் ஆற்றலும் நல்குவது பற்றி வடிவாம்பிகையை “நேயானுகூல மனமுடையாய்” என்று துதிக்கின்றார். தமக்கும் அம்பிகைக்குமுள்ள உறவைத் தாய்க்கும் மகனுக்குமுள்ள உறவை வைத்துச் சிவாகமங்கள் தெரிவித்தலால் “நீயும் என்றன் தாயாகில் யான் உன் தனயனுமாகில்” என்று தெரிவித்து, தனயனுக்குளதாகும் துயரைப்போக்கி மகிழ்வுறச் செய்தல் தாய்க்கு முறை என்பது பற்றி “என்றன் உள்ளத்தில் ஓயாது உறுந்துயர் எல்லாம் தவிர்த்தருள்” என்று விண்ணப்பிக்கின்றார். அமுத வடிவினளாதலின் அம்பிகையை “செவ்வாயார் அமுத வடிவே” என்று பாராட்டுகின்றார்.
இதன்கண், உலகுயிர்கட்கு அறிவும் ஆற்றலும் அருளுபவள் அம்பிகை என்றும், அவர்கட்கும் உயிர்கட்குமுள்ள உறவு தாய்க்கும் மக்கட்குமுள்ள உறவாம் என்றும் வினவியவாறாம். (100)
|