76. தனித் திருமாலை
தனித்
தனியான பாட்டு வகையில் அமைந்த பாமாலையாக இருப்பதுபற்றி, இஃது இப் பெயர் பெறுகிறது.
கட்டளைக் கலித்துறை
1487. வன்மூட்டைப் பூச்சியும் புன்சீலைப்
பேனும்தம் வாய்க்கொள்ளியால்
என்மூட்டைத் தேகம் சுறுக்கிட
வேசுட் டிராமுழுதும்
தொன்மூட் டையினும் துணியினும்
பாயினும் சூழ்கின்றதோர்
பொன்மூட்டை வேண்டிஎன் செய்கேன்
அருள்முக்கட் புண்ணியனே.
உரை: அருளொழுகும் கண்கள் மூன்றுடைய புண்ணியப் பொருளே, வலிய மூட்டைப்பூச்சியும் புல்லிய சீலைப்பேனும் தத்தம் வாயிலுள்ள விடம் தங்கிய கருவிகளால் மூட்டை போன்ற என் உடம்பைச் சுறுக்கெனக் கடித்து இரவுமுழுதும் பழந்துணி மூட்டையினும் மேற் போர்த்த துணியினும் பாயினும் நிறைந்து சூழ்ந்து கொண்டது என்னிடமுள்ள பொன் மூட்டையின் பொருட்டாகும்; இதற்கு என்ன செய்வேன். எ.று.
பிடித்துக் கொல்லுதற்குக் கை யெழு முன்பே குறிப்பறிந்து ஓடி மறையும் உணர்வு வன்மையுடைமை பற்றி, மூட்டைப் பூச்சியை “வன்மூட்டைப் பூச்சி” எனக் குறிக்கின்றார். உடல் பருத்துக் காலும் உணரியும் தலையும் சிறுத்து மூட்டை யீர்த் தேகுவோர்போல விரைந்தோடுவது பற்றி மூட்டைப் பூச்சி அப்பெயர் பெற்றது போலும். அழுக்கேறி நைந்த ஆடையின்கண் உறையும் பேனாதலால், தலைப்பேனின் நீக்கற்குப் “புன் சீலைப் பேன்” எனப் புகல்கின்றார். அவை கடிக்கும்போது தீச்சுடுவதுபோல்வது கொண்டு “வாய்க் கொள்ளியால் என் மூட்டைத் தேகம் சுறுக்கிடவே சுட்டு” எனவும், இரவுப் போதில் உறங்குவோரைக் கடித்து அவரது குருதியை யுண்பது அவை யிரண்டிற்கும் இயல்பாதலால் “இரா முழுதும்” எனவும், அவை தங்குமிடம் அழுக்குத் துணி மூட்டைகளும், அழுக்கு மிக்க துணிகளும் கிழிந்த பாய்களுமாதல் பற்றி, “தொன் மூட்டையினும் துணியினும் சூழ்ந்து” எனவும் இயம்புகிறார். கூட்டமாய் இருப்பதால் “சூழ்ந்து” என்கிறார். நாலைந்து வெண் பொற் காசுகளை இடையில் உடுத்த துணியின் மூலையில் முடிந்திருந்தமை தோன்ற “ஓர் பொன் மூட்டை வேண்டி” என்றும், அவற்றைக் கொல்லற்கு மனம் செல்லாமையால், “என்செய்கேன்” என்றும் கூறுகின்றார்.
இதனால், ஒருநாள் இரவு மூட்டைப் பூச்சிக்கும் சீலைப் பேனுக்கும் வருந்தி இரங்கினமை தெரிவித்தவாறாம். (1)
|