New Page 1
நேரிசை வெண்பா
1488. மான்முடிமே லும்கமலத் தான்முடிமே லும்தேவர்
கோன்முடிமே லும்போய்க் குலாவுமே -- வான்முடிநீர்
ஊர்ந்துவலம் செய்தொழுகும் ஒற்றியூர்த் தியாகரைநாம்
சார்ந்துவலம் செய்கால்கள் தாம்.
உரை: வானத்து உச்சியினின்று வரும் கங்கையாறு வந்து வலம் செய்து சடையில் தங்கும் திருவொற்றியூர்த் தியாகப் பெருமானை அடைந்து, வலம் வந்து வழிபாடு செய்யும் கால்கள் திருமால், பிரமன், தேவர்க்கரசனான இந்திரன் ஆகியோர் முடிமேலும் தோய்ந்து சிறப்படையும். எ.று.
ஆகாய கங்கை வானத்தின் முகட்டிலிருந்து மண்ணகம் இழிந்து வந்தமை புலப்பட, கங்கை யாற்றை, “வான் முடிநீர்” என்று புகழ்கிறார். ஊர்தல் - வானத்தின் மேலிருந்து இழிதல்மேற்று. சிவனது திருமுடிச்சடை தனக்கு ஒடுங்குமிடமாதல் தெரிந்து கொண்டமை புலப்பட, “வலம் செய்து ஒழுகும்” என வுரைக்கின்றார். திருவொற்றியூர்த் திருக்கோயிலை யடைந்து அதன்கண் எழுந்தருளும் தியாகப்பெருமானைக் கண்டு வலம் செய்தல் முறையாதலால் “ஒற்றியூர்த் தியாகரை நாம் சார்ந்து” எனவும், “வலம் செய் கால்கள்தாம்” எனவும் கூறுகின்றார். வலம் செய்து வணங்க எய்தும் பயன் கூறுவார், “மால் முடிமேலும், கமலத்தான் முடிமேலும், தேவர் கோன் முடிமேலும் போய்க் குலவும்” என்கின்றார். கமலத்தான் - தாமரையில் வீற்றிருக்கும் பிரமன். இந்திரன் - தேவர் வணங்கும் அரசனாகிய இந்திரன். குலவும் என்பது, மால் முதலோர் கால் மேல் முடிதோய வணங்குவர் என்ற பொருளது.
இதனால், ஒற்றித் தியாகப்பெருமானை வலம்செய்து வணங்குவோர், திருமால் முதலியோர் தம் காலில் வீழ்ந்து வணங்க வீற்றிருப்பர் என விளம்பியவாறாம். (2)
|