New Page 1
குறள் வெண் செந்துறை
1489. சத்திமான் என்பர்நின் தன்னை ஐயனே
பத்திமான் தனக்கலால் பகர்வ தெங்ஙனே.
உரை: ஐயனே, உன்னைச் சத்திமான் என்று பெரியோர் சொல்லுகின்றார்கள்; அப் பெயரைப் பத்திமானுக்கு உரைப்பதன்றி உனக்குரைப்பது எங்ஙனம் பொருந்தும்? எ.று.
சத்திமான் என்பது, எல்லா வகையான சத்திகளையும் (ஆற்றல்களையும்) உடையவன் என்றும், சத்தியாகிய தேவியை ஒரு கூறாகவுடையவன் என்றும் இருபொருள் படும் என அறிக. பத்திமான் - பத்தியுடையவன்; அவன் பத்தியால் நிறைந்த புத்தியும், அதனால் மிக்க வன்மையும் பெறுவனாதலால், “பத்திமான் தனக்கலாற் பகர்வது எங்ஙனே” என வினவுகின்றார். சத்தியொருபாதியும் சிவம் ஒருபாதியும் உடைமையால் சதாசிவ மூர்த்தியைச் சத்திமான் என்பர். சிவமேயாகிற போது சத்தியில்லாமையால், சத்திமான் என்பது பொருந்தாதே என வினாவப்படுகிறது.
இதனால், சத்திமான் என்ற சொன்னயம் உணர்த்தப் பட்டவாறாம். (3)
|