149.

    தேவருந் தவமுனிவரும் சித்தரும்
        சிவனரி யயனாகும்
    மூவரும் பணி முதல்வநின் னடியிலென்
        முடியுற வைப்பாயேல்
    ஏவரு மெனக் கெதிரிலை முத்திவீ
        டென்னுடையது கண்டாய்
    தாவரும் பொழிற் றணிகையங் கடவுளே
        சரவண பவ கோவே.

உரை:

     வளம் கெடாத பொழில் சூழ்ந்த தணிகைப் பெருமானே, சரவணப் பொய்கையிற் பிறந்தவனே, தலைவனே, தேவர், அரிய தவத்தையுடைய முனிவர், சித்தி வல்ல சித்தர் ஆகியோரும், சிவன், திருமால், பிரமன் ஆகிய மூவரும் பணிந்து ஏத்தும் முதற் பரம்பொருளே, நின் திருவடிக்கண் எளியேன் தலை வைத்து வணங்கும் வாய்ப்பை யளிப்பாயாயின், யாவரும் எனக்கு நிகராகும் பேறுடையாராகார்; முத்தியாகிய வீடும் எனக்கு உரியதாகும், எ. று.

     தாவல்- கெடுதல். சரவணப் பொய்கையில் திருவுருக் கொண்டானெனப் புராணம் கூறுதலால், முருகனுக்குச் “சரவண பவன்” என்பது மரபு. Êசரவணப் பொய்கை- தருப்பைப் புல் நிறைந்த நீர்நிலை. தேவர், விண்ணுலகிற் பிறந்து வாழ்பவர். அருந்தவ முனிவர், பிறப்பாலன்றி அரிய தவத்தால் உயர்ந்து துன்ப வின்பங்களை ஒப்ப மதிக்கும் உரவோர். எண்வகைச் சித்திகளும் வல்லவர் சித்தர். மாயா மண்டலத்தினுள் படைத்தல் முதலிய முத்தொழிலையும் செய்யும் மூர்த்திகள் சிவன் திருமால் பிரமன் ஆகிய மூவரும் என அறிவித்தற்குச் “சிவன் அரி அயனாகும் மூவரும் பணி முதல்வ” என மொழிகின்றார். திருவடி நீழல் எய்தும் பேறுண்டாயின் பிறவித் துன்பங்கள் இல்லையாக என்றும் வற்றாத பேரின்பப் பெருவாழ்வு உண்டாதலால், “நின்னடியில் என் முடியுற வைப்பாயேல் ஏவரும் எனக்கு எதிரிலை” என்றும், முத்தியாகிய வீடு உரிய விடமாய் விடுதலால், “முத்தி வீடு என்னுடையது” என்றும் இயம்புகிறார். இந்நலம் பற்றியே “இருகாற் குரம்பையிது நான் உடையது இது பிரிந்தால், தருவா யெனக்குன் திருவடிக் கீழோர் தலை மறைவே” (தனி) என நாவுக்கரசரும், “கறைக் கொண்ட கண்டத் தெம்மான் தன் அடிக் கொண்டு என் முடிமேல் வைத்திடு மென்னும் ஆசையால் அறிவிலா நாயேன்” (அதிகை) என நம்பியாரூரரும் உரைக்கின்றார்கள். கண்டாய், வீறு தோன்றக் கூறும் முன்னிலை யசை.

     இதனால் திருவடி நீழற் கண்ணுள்ள ஆர்வம் எடுத்துரைத்தவாறு.

     (9)