அறுச

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1490.

     படியே அளந்த மாலவனும்
          பழைய மறைசொற் பண்ணவனும்
     முடியீ றறியா முதற்பொருளே
          மொழியும் ஒற்றி நகர்க்கிறையே
     அடியார் களுக்கே இரங்கிமுனம்
          அடுத்த சுரநோய் தடுத்ததுபோல்
     படிமீ தடியேற் குறுபிணிபோம்
          படிநீ கடைக்கண் பார்த்தருளே.

உரை:

      நிலவுலகை யளந்த திருமாலும், பழைய வேதங்களை யோதும் பிரமதேவனும் முறையே முயன்று அடியும் முடியும் காணாதொழிந்த முழுமுதற் பொருளாகியவனே, சிறப்பாக வுரைக்கப்படும் திருவொற்றியூர்க்கு இறைவனே, முன்பு அடியார்களாய் விளங்கிய பெருமக்களுக்கு வந்த சுரநோயைப் போக்கியதுபோல, இங்கே அடியேனுக் குண்டாகிய நோய் நீங்குமாறு கடைக்கண் பார்த்தருள்க. எ.று.

      திருவிக்கிரமனாய் உருக்கொண்டு திருமால் உலகளந்தானென்ற செய்தி நாடறிந்த தொன்றாதலின் “படியே யளந்த மாலவன்” எனவும், வேதமோதுவது பிரமன் தொழிலாதல் பற்றி “பழைய மறை சொல் பண்ணவனும்” எனவும், இருவரும் முறையே தாணுவாய் நின்ற சிவத்தின் திருவடியையும் திருமுடியையும் காண முயன்று மாட்டா தொழிந்த வரலாறு உலகறிந்த தாதலால், “முடியீறறியா முதற்பொருளே” எனவும் மொழிகின்றார். ஏகாரம்: அசை. ஒருகால் தோன்றிய வேதங்கள் இன்னும் மாறாமை விளங்கப் “பழைய மறை” எனக் கூறுகிறார். “பதும பீடிகையும் முது பழமறை விரித்தொளி பழுத்த செந்நாவும்” (மீனாட்.பி.) எனக் குமரகுருபரர் உரைப்பர். பண்ணவன் - கடவுளாகிய பிரமன். “மொழியும்” எனப் பொதுப்படக் கூறுதலால், சிறப்புற மொழியும் எனக் கொள்ளப்பட்டது. “அடியார்கள்” என்றது திருஞான சம்பந்தரையும் அவரொடு சென்ற தொண்டர்களையும். திருக் கொடிமாடச் செங்குன்றூரில் ஞானசம்பந்தரோடு சென்ற அடியார்கட் குற்ற சுரநோய் நீங்கிய வரலாறு இங்கே குறிக்கப்படுகிறது. பிணியெனப் பொதுவாகக் குறித்தலால் இன்ன பிணியெனத் தெரிந்திலது.

      இதனாற் பிணி நீங்க வேண்டி இறைவனிடம் முறையிட்டவாறாம்.

     (4)