எண
எண்சீர்க் கழிநெடிலடி
ஆசிரிய விருத்தம்
1491. மன்றாடும் மாமணியே நின்பொற் பாத
மலர்த்துணையே துணையாக வாழ்கின் றோர்க்கு
ஒன்றாலும் குறைவில்லை ஏழை யேன்யான்
ஒன்றுமிலேன் இவ்வுலகில் உழலா நின்றேன்
இன்றாக நாட்கழியில் என்னே செய்கேன்
இணைமுலையார் மையலினால் இளைத்து நின்றேன்
என்றாலும் சிறிதெளியேற் கிரங்கல் வேண்டும்
எழில்ஆரும் ஒற்றியூர் இன்ப வாழ்வே.
உரை: அழகு பொருந்திய ஒற்றியூரில் உள்ள இன்ப வாழ்முதலே, அம்பலத்தில் ஆடியருளும் மணிபோலும் மேனியையுடைய பெருமானே, நின்னுடைய அழகிய இரண்டாகிய திருவடித் தாமரைகளையே துணையாக நினைந்து வாழ்கின்ற நன்மக்கட்கு, ஒன்றாலும் குறை யிருக்கக் காணேன். ஏழையாகிய யான் ஒன்றும் கையிலின்றி வருந்துகின்றேன்; கையில் ஒன்றுமில்லாமலே காலம் போகுமாயின், நான் என்ன செய்வேன்? மகளிரது காமவேட்கையால் உடலிளைத் தொழிந்தேன்; என்றாலும், எனக்கும் நீ சிறிது மனமிரங்கியருளல் வேண்டும். எ.று.
கிழக்கிற் கடலும், ஊர் நடுவே திருக்கோயிலும், தெற்கில் சென்னை நகரும், வடக்கில் இருள்படத் தழைத்த சோலைகளும் கொண்டு திகழ்வதுபற்றி, ஒற்றியூரை, “எழிலாரும் ஒற்றியூர்” எனப் பாராட்டுகின்றார். “மன்றாடும் மணி” யென்றது கூத்தப் பெருமானை. இறைவன் திருவடி யல்லது பிறிதொன்றனையும் பற்றாகவும் துணையாகவும் கொள்ளார்க்கு எல்லா நலங்களும் இனிது நிறையும் என்பவாகலின், “நின் பொற்பாத மலர்த்துணையே துணையாக வாழுகின்றோர்க்கு ஒன்றாலும் குறையில்லை” என உரைக்கின்றார். இறைவன் திருவருளைத் துணையாகக் கொள்ளுவதோ, அத்திருவருள் உண்மையை யறியும் அறிவோ தனக்கில்லை யென்பார், தம்மை “ஏழையேன் யான் ஒன்றுமிலேன்” என்றும், அதனால், தாம் வருந்துகின்ற இயல்பை, “இவ்வுலகில் உழவா நின்றேன்” என்றும் உரைக்கின்றார். இவ்வாறே என் வாழ்நாள் முழுதும் திருவருள் நலமின்றிக் கழியுமாயின், வாழ்வு பயனின்றாய் ஒழியுமென்பார், “இன்றாக நாட்கழியில் என்னே செய்கேன்” என இரங்குகிறார். உலகில் தாம் இருந்து பெறும் பயன் இதுவென்பார், “இணைமுலையார் மையலினால் இளைத்து நின்றேன்” எனவும், எனினும் தம்பால் திருவுள்ளம் இரங்கி அருள்புரிய வேண்டுமென வேண்டுவார், “என்றாலும் சிறிது எளியேற்கு இரங்கல் வேண்டும்” எனவும் வேண்டுகின்றார்.
இதனால், தமது வாழ்வு பயனிலதாய்க் கழிய லாகாதென வேண்டிக் கொண்டவாறாம். (5)
|