1492.

     சோறு வேண்டினும் துகிலணி முதலாம்
          சுகங்கள் வேண்டினும் சுகமலாச் சுகமாம்
     வேறு வேண்டினும் நினைஅடைந் தன்றி
          மேவொ ணாதெனும் மேலவர் உரைக்கோர்
     மாறு வேண்டிலேன் வந்துநிற் கின்றேன்
          வள்ளலே உன்றன் மனக்குறிப் பறியேன்
     சேறு வேண்டிய கயப்பணைக் கடற்சார்
          திகழும் ஒற்றியூர்ச் சிவபரஞ் சுடரே.

உரை:

      உண்ணச் சோறு வேண்டினும், உடுக்கத் துணி முதலாயின வேண்டினும், படுக்கப் பாய் முதலிய சுகங்கள் வேண்டினும், இவற்றின் வேறாய சுகங்கள் பலவும் வேண்டினும், இறைவனை நினைந்தார்க்கன்றி எய்தவொண்ணாது என முன்னோர் உரைப்பர்; அவர்க்கு மாறாக ஒன்றும் வேண்டுகின்றேனில்லை; உன்பால் வந்து நிற்கின்றேன்; சேறு பரந்த மெல்லிய நன்செய்கள் மிக்க கடல்சார்ந்த நெய்தல் நிலத்து ஊர் எனத் திகழும் திருவொற்றியூரில் எழுந்தருளும் சிவபரம் பொருளே, வள்ளலாகிய உன் திருவுள்ளக் குறிப்பை அறிய மாட்டேனாகின்றேன். எ.று.

     உண்டி யுடைகட்கு வேறாய்ச் சுகம் விளைவிக்கும் பொருள்களைச் “சுகமலாச் சுகம்” என்று குறிக்கின்றார். அவை வீடு, நிலம், பொன், பொருள் முதலியனவாம். நேரே சுகந்தருவனவும், சுகம் விளைவிப்பனவுமாகிய எத்தகைய பொருள் வேண்டினும் இறைவன் திருவருளாலன்றி எய்த முடியா தெனப் பெரியோர் கூறும் பொருளுரையை மனத்திற் கொண்டு, “நினை யடைந்தன்றி மேவொணாது எனும் மேலவர் உரை” என்று குறிக்கின்றார். எதனையும் நின் திருவருள் எழுச்சியின்றி என் உள்ளம் வேண்டுகின்றதில்லை என்பது தெரிவித்தற்கு, “மாறு வேண்டிலேன் வந்துநிற்கின்றேன்” எனவும், வேண்டுவார் வேண்டுவதீயும் வள்ளலாதலின், நின் திருவுள்ளக் குறிப்பையே நோக்குகிறேன் என்பாராய் “வள்ளலே உன்றன் திருக்குறிப் பறியேன்” எனவும் முறையிடுகின்றார்.

     இதனால், உள்ளத் தெழும் விருப்புக்களும் திருவருளா லெழுவன என்பது தெரிவித்தவாறாம்..

     (6)