1494.

     சீர்த்தேன் பொழிலார் ஒற்றிநகர்த்
          தியாகப் பெருமான் பவனிவரப்
     பார்த்தேன் கண்கள் இமைத்திலகாண்
          பைம்பொன் வளைகள் அமைத்திலகாண்
     தார்த்தேன் குழலும் சரிந்தனகாண்
          தானை இடையிற் பிரிந்தனகாண்
     ஈர்ந்தேன் குழலாய் என்னடிநான்
          இச்சை மயமாய் நின்றதுவே.

உரை:

      குளிர்ந்த தேன் படிந்த கூந்தலையுடைய என் தோழி சீரிய தேன் துளிக்கும் சோலைகளையுடைய ஒற்றியூர்த் தியாகப் பெருமான் தெருவில் திருவுலா வருவதைப் பார்த்த என் கண்கள் இமைத்தல் ஒழிந்தன; பசிய பொன்னாலான கைவளைகள் செறிவிழந்தன; மாலையிற் கசியும் தேன்படிந்த கூந்தல் முடியவிழ்ந்து சரிந்தன; இடையிற் கட்டிய உடையும் நெகிழ்வதாயிற்று; நான் வேட்கை மயமாய் நின்றது என்னடி வியப்பாக இருக்கிறது? எ.று.

     சீர்த்தேன் - சிறந்த தேன். பவனி வரப் பார்த்த கண்கள் இமைத்த வழிப் பார்வையாற் பருகப்படும் தியாகரது உருநலம் தடைப்படும் என்ற அச்சத்தால் இமைத்தில என்பது குறிப்பு. பசும்பொன்னால் ஆகிய வளை, 'பைம்பொன்வளை' எனப்பட்டது. அமைந்தில என்பது. இறுக நில்லாவாயினமை காட்டிற்று; இஃது “உடம்பு நனி சுருங்கல்” எனத் தொல்காப்பியம் கூறும் மெய்ப்பாடு. தார்த்தேன் - மாலையிடத்துப் பூக்களிற் கசியும் தேன். வேட்கை வயப்பட்ட மகளிர்க்குக் கூந்தல் முடி தானேயவிழ்தல் இயல்பு; இதனைக் “கூழை விரித்தல்” எனவும். உடை நெகிழ்தலை, “உடை பெயர்த் துடுத்தல்” எனவும் சான்றோர் கூறுவர்.

     (2)