1496. தென்னார் சோலைத் திருஒற்றித்
தியாகப் பெருமான் பவனிவரப்
பொன்னார் வீதி தனிற்பார்த்தேன்
புளகம் போர்த்தேன் மயல்பூத்தேன்
மின்னார் பலர்க்கும் முன்னாக
மேவி அவன்றன் எழில்வேட்டு
என்னார் அணங்கே என்னடிநான்
இச்சை மயமாய் நின்றதுவே.
உரை: அரிய அணங்குபோன்ற என் தோழி, அழகிய சோலைகளையுடைய திருவொற்றியூர்த் தியாகப் பெருமானார் பொன்னொளி திகழும் திருவீதியில் திருவுலா வரப் பார்த்ததும், எனக்கு உடல் பூரிக்க, மையல் மனத்தில் பரவ, மகளிர் பலர்க்கும் எதிரே முற்படச் சென்று, அவனது அழகைக் காதலித்து வேட்கை யுருவமாய் நான் மாறி நின்றதை என்னென்பேன்! எ.று.
அணங்கு - தெய்வப் பெண். தென் - அழகு. பொன்னார் வீதி - பொன்னிற மணல் பரந்த தெரு. மகிழ்ச்சியால் உடலகத்துண்டாகும் பூரிப்பு, புளகம் எனப்படுகிறது. தியாகப் பெருமான் திருமேனியைக் கண்டவிடத்துண்டாகிய காதல் வேட்கையால், பலர் காணச் செல்லுதற்குத் தடை செய்யும் நாணவுணர்ச்சி நீங்கி, கூடியிருக்கும் மகளிர் கண்ணெதிரே முற்படச் சென்று பெருமான் திருமேனி நலம் கண்டு உவப்புற்றேன் என்பாள், “மின்னார் பலர்க்கு முன்னாக மேவி அவன்றன் எழில் வேட்டு இச்சை மயமாய் நின்றது” என வுரைக்கின்றாள். மின்னார் - மின்னற்கொடி போலும் இடையையுடைய இளமகளிர். இச்சை மயமாதல் - அறிவு திரிந்து காதல் வேட்கை செலுத்தும் வழியில் இயங்குதல், புதிது தோன்றி மயக்குவதால், “என்னடி” என வியக்கின்றாள். இதனால் அறிவு திரிந்தமை குறிப்பாய் உணர்த்தியவாறு. (4)
|