1498. சேயை அருளுந் திருஒற்றித்
தியாகப் பெருமான் வீதிதனில்
தூய பவனி வரக்கண்டேன்
சூழ்ந்த மகளிர் தமைக்காணேன்
தாயை மறந்தேன் அன்றியும்என்
தனையும் மறந்தேன் தனிப்பட்டேன்
ஏயென் தோழி என்னடிநான்
இச்சை மயமாய் நின்றதுவே.
உரை: என்னுடைய தோழியே, குறிஞ்சித் தெய்வமான முருகனைத் தந்தருளும் திருவொற்றியூர்த் தியாகேசப் பெருமான் திருவீதியில் தூய வுலா வரக் கண்டேனாக, என்னைச் சூழ நின்ற ஏனை மகளிரைக் காணேனானதுடன், உடன் போந்த என் தாயையும் மறந்தேன்; என்னையே மறந்து போனேன்; இவ்வாறு வேட்கை யுருவினளாய் நான் மாறியதை என்னென்பேன்? இஃதொரு வியப்புக் காண். எ.று
.
சேய் - முருகனுக்குப் பெயர். “சேயோன் மேய மைவரை யுலகம்” என்பது தொல்காப்பியம். “முருக வேட்குத் தந்தை காண்” (ஏகம்ப) எனத் திருநாவுக்கரசர் முதலியோர் உரைப்பதால், “சேயை யருளும் திருவொற்றித் தியாகப் பெருமான்” என்று புகழ்கின்றாள். திருவுலாவில் நல்லொழுக்கமும் தூய அன்பும் உடையார் கூட்டமே பெருகி யிருந்தமை விளங்கத் “தூய பவனி” என்று சொல்லுகின்றாள். திருவுலாக் காட்சியில் ஈடுபட்ட நங்கையின் திருவுள்ளம் தியாகப் பெருமானது அருட்காட்சியில் வேறற ஒன்றினமையின், தன்னைச் சுற்றி நின்ற மகளிரையோ பக்கல் நின்ற தாயையோ காணாளாயினமையின், “சூழ்ந்த மகளிர்தமைக் காணேன் தாயை மறந்தேன்” எனவும்,. “அன்றியும் என்றன்னையும் மறந்தேன்” எனவும் கூறுகின்றாள். தனது பெண்மைத் தன்மையையிழந்து உணர்வுருவாய ஒருமை நிலையுற்றமை புலப்படத் “தனிப் பட்டேன்” என இயம்புகிறாள். இஃதொரு புதுமை யனுபவமாதலால் மருண்டு “என்னடி நான் இச்சை மயமாய் நின்றது” என வியந்தோதுகின்றாள். (6)
|