1499. திங்கள் உலவும் பொழில்ஒற்றித்
தியாகப் பெருமான் திருவீதி
அங்கண் களிக்கப் பவனிவந்தான்
அதுபோய்க் கண்டேன் தாயரெலாம்
தங்கள் குலத்துக் கடாதென்றார்
தம்மை விடுத்தேன் தனியாகி
எங்கண் அனையாய் என்னடிநான்
இச்சை மயமாய் நின்றதுவே.
உரை: சந்திரன் தவழும் சோலைகள் சூழ்ந்த திருவொற்றியூர்த் தியாகப் பெருமான் வீதியிடத்தே திருவுலா வந்தாராக, என் கண் போன்ற தோழியே, யான் சென்று அவரைக் கண்டேனாக, எனது செயலைக் கண்ட பிற தாயர், யான் தனிச்சென்றது தமது பெண்ணினத்துக்கு ஒத்ததன்று என்று எடுத்துரைத்தார்கள்; அவரை மதியாமல் தனியவளாய் நின்ற யான் வேட்கை மயமானேன்; அவ்வாறானதை என்னென்பேன்; வியப்பாக வன்றோ இருக்கிறது! எ.று.
திங்கள் - சந்திரன். சோலைகள் வானளாவ உயர்ந்திருப்பது குறிக்கத் “திங்கள் உலவும் பொழில்” எனக் கூறுகின்றார். அங்கண் - அழகிய கண்கள். காண்பவர் எல்லோருடைய கண்களும் பார்த்து மகிழும்படி வந்தமை விளங்க, “அங்கண் களிக்கப் பவனி வந்தான்” என நங்கை நவில்கின்றாள். எல்லோரும் கண்டு இன்புறுவது கண்ட யான் மனையின் கண் ஒடுங்கியிருக்க மாட்டாமையாற் றனித்து விரைந்து சென்று கண்டேன் என்பாள், “அது போய்க் கண்டேன்” எனவும், மகளிரது இளமை நலமும் வளமும் தாயரால் பேணி வளர்க்கப்படும் சிறப்புடைமை பற்றி, “தாயரெலாம் தங்கள் குலத்துக்கு அடாது என்றார்” எனவும் எடுத்துரைக்கின்றாள். நற்றாயும் செவிலியும் ஆகிய தாயர் பலராதலால், “தாயரெலாம்” எனக் கூறுகிறார். இளமங்கையர் நலம் தாயரால் பேணப்படுவதை, “தாயோம்பு ஆய்நலம்” (அகம். 146) எனச் சான்றோர் எடுத்துக் கூறுவதனால் அறிக. “பூவோரனையர் மகளிர் வண்டோரனையர் ஆடவர்” என்ற பழமை மொழி மகளிர் தனித்துச் சேறல் முறையாகா தென்பதை வற்புறுத்துகிறது. தன் மனத்தெழுந்த ஆர்வத்துக்குத் தடையாயினமையின் அவரின் நீங்கித் தனித்துச் சென்றமை விளக்குவாளாய், “தம்மை விடுத்தேன் தனியாகி” என்றும், தனித்துச் சென்றதன் விளைவாகத் தான் வேட்கை மிக்க வுள்ளத்தவளானது எண்ணி வியக்கின்றாளாகலின், “என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே” என்றும் இசைக்கின்றாள். இது காட்சி யாசை கைகடந்தமை கூறியவாறாம். (7)
|