15.

    கற்றொளிகொள் உணர்வினோர் வேண்டாத விப்பெருங்
        கன்ம வுடலிற் பருவம் நேர்
        கண்டழியு மிளமைதான் பகல் வேடமோ புரைக்
        கடனீர் கொலோ கபடமோ
    உற்றொளியின் வெயிலிட்ட மஞ்சளோ வானிட்ட
        ஒருவிலோ நீர்க் குமிழியோ
        உலையனல் பெறக் காற்றுள் ஊதும் துருத்தியோ
        ஒன்றுமறியே னிதனை நான்
    பற்றுறுதியாக் கொண்டு வனிதையர்கண் வலையினில்
        பட்டுமதி கெட்டுழன்றே
        பாவமே பயில்கின்ற தல்லாது நின்னடிப்
        பற்றணுவு முற்றறி கிலேன்
    சற்றையகல் சென்னையிற் கந்த கோட்டத்துள் வளர்
        தலமோங்கு கந்த வேளே
        தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
        சண்முகத் தெய்வ மணியே.

உரை:

     சிறிதென்றற் கில்லாத சென்னைக் கந்த கோட்டத்துளே சிறக்கும் கோயிலை இடமாகக் கொண்ட கந்த வேளாகிய பெருமானே, தண்ணிய வொளிதிகழும் தூய மணிகளுட் சைவமணியாகிய சண்முகங்களை யுடைய தெய்வ மணியே, கற்பனகற்று ஞான வொளி கொண்ட உணர்வுடைய சான்றோர் விரும்பாத இப்பெரிய வினைக்குரிய உடம்பில் பல பருவங்களைக் கொண்டு நீங்கும் இளமைப் பருவம், பகல் வேடமோ, உயர்ந்த கடல் நீரோ, கபடத் தோற்றமோ, மிக்க ஒளியுடைய வெயிலில் இட்ட மஞ்சளோ, வானிடத்தே தோன்றும் ஒரு வில்லோ, நீர்க்குமிழியோ, உலைக்களத்து நெருப்பின் அனல் மிக வேண்டிக் காற்றை உள்ளுற ஊதும் துருத்தியோ, ஒன்றையும் தெளிய அறியேன்; இதனை உறுதியான பற்றுக் கோடாக் கொண்டு மகளிர் கட்பார்வையாகிய வலையில் அகப்பட்டு அறிவிழந்து வருந்திப் பாவமே செய்குவதன்றி நின் திருவடிக்கண் அணு வளவும் பற்று வைத்தேனில்லை; இனி யான் யாது செய்வது. எ. று.

     சற்று, சிறிது; ஐயீறு பெற்றுச் சற்றை யென வந்தது. கற்பன கற்க எய்தும் அறிவு போல ஞானநூல்களைக் கற்றவழி எய்துவது ஞானமாதலால், அதனைக் “கற்றொளி கொள் உணர்வு” எனக் கூறுகின்றார். “கற்ற கேள்வி ஞானமான காரண மென்னை கொலாம்” (சோபுரம்) என ஞானசம்பந்தர் கூறுவது காண்க. ஞானம் ஒளி மயமாதலால் கற்ற ஞானவான்களைக் “கற்றொளி கொள் உணர்வினோர்” என்று பாராட்டுகின்றார். வினைக்கு ஏதுவும் பயனுமாதலாற் கற்றுணர்ந்தோர் உடம்பை விரும்புவதில்லை யாதலால், “உணர்வினோர் வேண்டாத இப்பெருங்கன்ம வுடல்” எனக் கூறுகின்றார். குழவிப் பருவம், பிள்ளைப் பருவம், காளைப் பருவம் எனப் பல பருவம் கொண்டது இளமை என்பது பற்றி, “பருவம் நேர்கண்டு அழியும் இளமை” என இசைக்கின்றார். பகற்போதில் ஆண் பெண்ணாகவும், இளையன் முதியனாகவும், வேதியர், நரிக்குறவர் முதலியோராகவும் வேடம் தாங்கி வீதிகளில் நடிப்பது பகல் வேடம் எனப்படும். இவர்கள் சங்க காலத்தில் பொருநர் எனப்பட்டனர். கால மாற்றத்தில் எண்ணிறந்த சாதிகளாக மக்கள் பிரிந்ததனால் இச்சாதிகள் ஒன்றில் ஒடுங்கி மறைந்தனர். பகல் வேடம் போலத் தோன்றி நின்று மறைந் தொழிதல் பற்றி, “இளமை பகல் வேடமோ” என்று கூறுகிறார். கடலிடத்து நீர், கழிநீர், மழைநீர், ஆற்றுநீர், ஊற்று நீராகவும் மாறுவதனால், “புரைக்கடல் நீர் கொலோ” எனப்படுகிறது. புரை, உயர்வு, “புரைய மன்ற புரையோர் கேண்மை” (நற்.1) என்பது போல, முதுமையைத் தனக்குட் கொண்டிருத்தலின் “கபடமோ” என்கிறார். உற்று ஒளியின் வெயில்-வேனில் நண்பகல் வெயில்-உற்றொளி. மிக்கவொளி. வெயிலில் உலரும் பசுமஞ்சள் மேந்தோல் சுருங்கி மேடு பள்ளமுற்றுத் தோன்றுதல் போலத் தசை செறிந்து ஒளியும் நிறமும் கொண்டு திகழும் இளமைமேனி முதுமையுற என்பெழுந்து தோல் சுருங்கித் தோன்றுதலால் “உற்றொளியின் வெயில் இட்ட மஞ்சளோ” எனப் புகல்கின்றார். வானிட்ட வில், வானில் தோன்றும் இந்திர வில். சிறிதுபோதில் மறைந்தொழிதலால் இளமையை “வானிட்ட ஒருவிலோ” எனப் புகல்கின்றார். “நீரிற் குமிழி இளமை” (நீதி நெறி விளக்கம்) எனக் குமரகுருபர் முதலியோர் கூறலின் “நீர்க்குமிழியோ” என்கின்றார். நீர் தெறிக்கும் துருத்தி வேறு உண்மையின், “உலையனல் பெறக்காற்று உள்ளூதும் துருத்தியோ” என வளவிய இளமை யுடம்பை எடுத்துக் காட்டுகின்றார். இது போல்வது தான் என்று இங்கே கூறியவற்றுள் ஒன்றையும் வரையறுத் துரைக்க லாகாமையால் “ஒன்று மறியேன்” என்று உரைக்கின்றார். இங்ஙனம் சிறிதும் நிலையில்லாத இளமையை நிலைத்த பற்றுக் கோடாகக் கொண்டு மங்கையரின் காமக் கட்பார்வையிற் சிக்கி இயற்கை நல்லறிவிழந்து அலைவுற்றுப் பாவமே நாளும் செய்யப்படுவதால், “இதனை நான் பற்றுறுதியாக் கொண்டு வனிதையர்கண் வலையினில் பட்டு மதிகெட்டுழன்றே பாவமே பயில்கின்ற தல்லாது” என வுரைக்கின்றார். மக்களினம் இளமைக் காலத்தில் இதனையல்லது சிறப்பாக ஒன்றும் செய்வதின்மையின், செய்யக்கடவது வேறு யாதென எழும் வினாவிற்கு விடையாக, இறைவன் திருவடிக்கண் பற்றுக் கொண்டு ஒழுகுதல் நல் வினையாகும்; அதனை யான் சிறிதும் செய்கிலேன் என்பாராய், “நின் அடிப்பற்று அணுவும் உற்றறிகிலேன்” என இசைக்கின்றார். இனி யான் செய்வது முதலாயின குறிப்பெச்சம்.

     இதனால் இளமையது புன்மை கண்டும் யான் இறைவன் திருவடியிற் பற்றுவைத்திலேன்; குற்றம் பொறுத்தருள்க என்று வேண்டிக் கொண்டவாறாம்.

     (15)