1500. தேசார் மணிசூழ் ஒற்றிநகர்த்
தியாகப் பெருமான் பவனிவரக்
கூசா தோடிக் கண்டரையில்
கூறை இழந்தேன் கைவளைகள்
வீசா நின்றேன் தாயரெலாம்
வீட்டுக் கடங்காப் பெண்எனவே
ஏசா நிற்க என்னடிநான்
இச்சை மயமாய் நின்றதுவே.
உரை: ஒளி பொருந்திய மணிகள் கிடந்தொளிரும் திருவொற்றியூர்த் தியாகப் பெருமான் திருவுலா வரக்கண்டு, சிறிதும் நாணமின்றி அவர் வந்தருளும் இடம்நோக்கி யோடி, இடையில் உடுத்த உடை நெகிழ்வதையும் உணராமல், கைவளைகள் கழன்று உகுவதையும் எண்ணாமல், என்னைக் கண்ட தாய்மாரெல்லாம், “இவள் என்ன வீட்டுக் கடங்காப் பெண்ணாய் இருக்கின்றாளே” என அலர் கூற, நான் வேட்கை யுருவினளாயினேன்; இஃதென்னடி, வியப்பாக இருக்கிறது! எ.று.
மணிகள் - கடல் அலைகள் கொணர்ந்து கரையில் ஒதுக்கும் மணிகள். வெண் மணலில் வெயிலொளியில் சிறப்புற வொளிர்வது பற்றி, “தேசார் மணிசூழ் ஒற்றிநகர்” என உவந்துரைக்கின்றார். இளநங்கை மனையின் நீங்கித் தனித்துச் செல்வது நாணமில் செயலாதல் பற்றி, “பவனி வரக் கூசாது ஓடிக் கண்டேன்” என்று கூறுகிறாள். கூசுதல் - நாணுதல். தியாகேசன் திருமேனி நலம் கண்ட மாத்திரையே அவன்பாற் காதல்மிக்குத் தன் கருத்தை இழந்தமையின், “அரையிற் கூறை யிழந்தேன்” எனவும், காதல் வெம்மையால் “உடம்பு நனி சுருங்கினமை”யால் கைவளைகள் கழன்றொலித்துக் கருத்தைக் கலைத்தமையால் வெகுண்டு அவற்றைக் கழற்றி யெறிந்தமை தோன்றக் “கைவளைகள் வீசா நின்றேன்” எனவும் கூறுகிறாள். பின் சென்ற தாயர், அவளைப் பற்றி மனைக்கு ஈர்க்க, அவர்கட் கடங்காமல் தியாகப் பெருமானையே நோக்கிச் சென்றமை கண்ட அத் தாய்மார்கள், இவள் வீட்டுக் கடங்காப் பெண்ணென்று சொல்லிக் கைவிட்டமையை நினைந்துரைத்தலின், “தாயரெல்லாம் வீட்டுக்கடங்காப் பெண்ணெனவே ஏசா நிற்க” என்று சொல்லி, தான் இச்சை மயமாகி நின்ற திறத்தைத் தோழிக்குரைக்கின்றாள். (8)
|