1501.

     தேடார்க் கரியான் ஒற்றிநகர்த்
          தியாகப் பெருமான் பவனிவரத்
     தோடார் பணைத்தோட் பெண்களொடும்
          சூழ்ந்து மகிழ்ந்து கண்டதன்றி
     வாடாக் காதல் கொண்டறியேன்
          வளையும் துகிலும் சோர்ந்ததுடன்
     ஏடார் கோதை என்னடிநான்
          இச்சை மயமாய் நின்றதுவே.

உரை:

      மலர்களின் இதழ் கொண்டு தொடுத்த மாலை யணிந்த தோழியே, அன்பால் தேட நினையாத வன்மன முடையார்க்குப் பெறற்கரியவராகிய திருவொற்றியூர்த் தியாகப்பெருமான் திருவுலா வந்தாராக, தோடணிந்த காதுகள் அலைக்கும் பருத்த தோள்களை யுடைய இளமகளிருடன் கூடி மகிழ்ச்சியுடன் சென்று அவரைக் கண்டேனேயன்றி, அப்பெருமான்பால் சுருங்குதலில்லாத காதலன்புற்றிலேனாகவும், கைவளை கழன்றோட, உடுத்த உடை நெகிழ, நான் வேட்கை யுருவினளானது எனக்கே வியப்பாய் இருக்கிறது; இஃது என்னே! எ.று.

     தேடல் என்பது ஈண்டுப் பலவேறு சமய வுண்மைகளையும், பலவேறு அறத்துறைகளையும் கற்றறிந் துணர்தல். அவ்வாறு உணர்வார்க் கன்றி உணரப்படாதவன் தியாகேசப் பெருமான் என்றற்குத் “தேடார்க்கரியான் ஒற்றிநகர்த் தியாகப் பெருமான்” என்று தெரிவிக்கின்றார். “புறச்சமய நெறி நின்றும் அகச்சமயம் புக்கும், புகல் மிருதி வழி யுழன்றும் புகலுமாச்சிரம, அறத்துறைகள் அவை யடைந்தும் அருந்தவங்கள் புரிந்தும், அருங் கலைகள் பல தெரிந்தும், ஆரணங்கள் படித்தும், சிறப்புடைய புராணங்கள் உணர்த்தும் வேத சிரப் பொருளை மிகத் தெளிந்தும் சென்றாற் சைவத் திறத்தடைவர்; இதிற் சரியை கிரியா யோகம் செலுத்திய பின் ஞானத்தாற் சிவனடியைச் சேர்வர்” (சூத். 8. அதி. 2) எனச் சிவஞான சித்தியார் தெரிவிப்பது காண்க. தோடு - இடக் காதில் அணியும் அணிவகை. பண்டை நாளில் இடக்காதணி தோடு எனவும், வலக்காதின் அணி குழை எனவும் வழங்கின. “தோடகமா யொர்காதும் ஒருகாதிலங்கு குழைதாய வேழவுரியன்” (நறையூர்) என ஞானசம்பந்தரும், “நெய் விலைப் பசும் பொன் தோடும் நிழல் மணிக்குழையும் நீவி” (சீவக. 488) எனத் திருத்தக்க தேவரும் கூறுவர். இவை இருபாலார்க்கும் பொது. பெண்கட்குத் தோள் பருத்தல் அழகென்பது பற்றிப் “பணைத் தோள் பெண்களொடு” என்றும், பல பெண்கள் சேர்ந்து பேசிக் கொண்டு உலாக் காணச் சென்றது தோன்ற, “பெண்களொடும் சூழ்ந்து மகிழ்ந்து கண்டதன்றி” என்றும் சொல்லுகின்றாள். வாடுதல் - சுருங்குதல். மலரிதழ்களால் தொடுத்த மாலை, “ஏடார் கோதை” எனப்படுகிறது. கண்டபோது அறிவறியாமல் அரும்பிய காதல் கருத்தில் மலர்ந்து பின்பு அவளது அறிவு முற்றும் கவர்ந்து உணர்வையே உண்டொழிந்த தென்பது குறிப்பாம்.

     (9)