1502.

     திருமாற் கரியான் ஒற்றிநகர்த்
          தியாகப் பெருமான் பவனிவரப்
     பெருமான் மனமு நானும்முன்னும்
          பின்னும் சென்று கண்டேமால்
     பொருமா நின்றேன் தாயரெலாம்
          போஎன் றீர்க்கப் போதுகிலேன்
     இருண்மாண் குழலாய் என்னடிநான்
          இச்சை மயமாய் நின்றதுவே.

உரை:

      திருமாலும் திருவடி காண்பதற் கரியவனான திருவொற்றியூர்த் தியாகப் பெருமான் திருவுலா வருவது காண்பதற்குப் பேரார்வம் கொண்ட என் மனமும் நானும் முன்னும் பின்னுமாகச் சென்று கண்டு மகிழ்ந்தேமாக, வாயால் ஏதோ சொல்லி யான் வெருவக் கேட்ட தாய்மார்கள் எல்லோரும் என்னைப் பிடித்திழுக்கவும், நான் எளிதிற் போகேனாயினேன், இருண்ட நிறத்தால் மாண்புற்ற கூந்தலையுடைய தோழி, இவ்வாறு நான் தியாகேசன்பால் வேட்கை யுருவினளானது என்னவாம்? எனக்கு இது வியப்பாக இருக்கிறது. எ.று.

      பெருமால் என்றவிடத்து, மால் மிக்க ஆர்வத்தின் மேற்று. பொருமுதல் - வாய் வெருவுதல்; முணு முணுத்தலுமாம். சின்மொழிப் பெருமகளாயவள் தானே வாய் பொருமுதல் அச்சம் விளைத்தமையின் மனைக்குப் போதல் வேண்டும் என அழைத்தும் வாராளாயினமை பற்றி ஈர்க்கலுற்றமை தோன்ற, “ஈர்க்கப் போதுகிலேன்” என வுரைக்கின்றாள். மால் கொண்ட நெஞ்சத்தால் தோழியை நோக்கும்போது, அவள் கூந்தலும் காரிருள் போன்று நிறம் இருண்டு தோன்றினமையால், “இருண்மாண் குழலாய்” என இசைக்கின்றாள். இங்ஙனம், மால் கொண்டவள் போன்று தியாகப் பெருமான்பால் உண்டாகிய வேட்கை மிகுதி அறிவை மயக்கி விட்டமைக்கு வியப்புறுவாளாய், “என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே” என்று இயம்புகின்றாள்.

     (10)