78. நாரையும் கிளியும் நாட்டுறு தூது

திருவொற்றியூர்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1503.

     கண்ணன் நெடுநாள் மண்ணிடந்தும்
          காணக் கிடையாக் கழலுடையார்
     நண்ணும் ஒற்றி நகரார்க்கு
          நாராய் சென்று நவிற்றாயோ
     அண்ணல் உமது பவனிகண்ட
          அன்று முதலாய் இன்றளவும்
     உண்ணும் உணவோ டுறக்கமுநீத்
          துற்றாள் என்றிவ் வொருமொழியே.

உரை:

      அண்ணலே, தேவரீர் அன்று திருவீதியில் உலா வரக் கண்ட அந்நாள் முதலாக இன்று வரை உண்ணும் உணவையும் உறக்கத்தையும் கைவிட்டு உமது பெருந்திணை நங்கை வருந்திக் கிடக்கின்றாள் என்னும் இவ்வொரு சொல்லை, கரியவனாகிய நெடிய திருமால் பன்னாள் இம் மண்ணைக் குடைந்து சென்றும் காண முடியா தொழிந்த திருவடியை யுடையவரும், யாவரும் எளிதிற் சென்று காண்டற்கமைந்த திருவொற்றியூரை யுடையவருமாகிய சிவபெருமானுக்கு, நாரைப் பறவையே நீ சென்று சொல்ல மாட்டாயோ? எ.று.

     கண்ணன் - கரிய நிறமுடையவன். தாணுவாய் நின்ற சிவபிரானுடைய திருவடியைக் காண்டற்குத் திருமால் பன்றி யுருக்கொண்டு பன்னாள் நிலத்தைக் குடைந்து சென்றார் என்ற செய்தி பற்றிக் “கண்ணன் நெடுநாள் மண்ணிடந்தும் காணக் கிடையாக் கழலுடையார்” என்றியம்புகின்றார். “செங்கண் நெடுமாலும் சென்றிடந்தும் காண்பரிய பொங்கும் மலர்ப்பாதம்” (அம்மானை) என்பது திருவாசகம். காண்டற்கரிய கழல் என்பதைக் “காணக் கிடையாக் கழல்” என வுரைக்கின்றார். கழல் அணிந்த திருவடியைக் கழல் என்றது ஆகு பெயர். “கழலா வினைகள் கழற்றுவ காலவனங் கடந்த அழலார் ஒளியன காண்க ஐயாறன் அடித்தலமே” (ஐயாறு) என வேறு நயங் கூறுவர் திருநாவுக்கரசர். “நண்ணும் ஒற்றி நகரார்” என்பதனால், அன்பராயினார் வருத்தமின்றித் தன் திருவடி கண்டு வழிபடும் பொருட்டு ஒற்றியூர்க்கண் எழுந்தருளியிருக்கின்றா ரென்பது கருத்தாம். மிக்க காமத்து வேட்கை யுற்ற நங்கை, நாரையைத் தியாகப் பெருமான்பால் தூதுவிடுக்கின்றாளாதலின், “நாராய் சென்று நவிற்றாயோ” என்று நவிற்றுகின்றாள். நாரை நாராய் என விளியேற்றது. தான் வகுத்துக் கூறும் தூதாம் தகுதி யுடையது அன்றாதலின், கூறற்பாலது இன்னது என்பாள், “அண்ணல் உமது பவனி கண்ட அன்று முதலாய் இன்றளவும் உண்ணும் உணவோடு உறக்கமும் நீத்து உற்றாள் என்ற இவ்வொரு மொழி” என்று கூறுகின்றாள். அண்ணல் - தலையளி செய்பவன். திருவுலாக் கண்ட பொழுது எய்திய காமநோய், பல்வேறு முயற்சிகளால் பன்னாள் முயன்றும் தீராமையால், “பவனி கண்ட அன்று முதல் இன்றளவும்” என்றும், உணவு சுருங்கியும் உறக்கம் குன்றியும் வருந்தும் நிலைமை விளங்க, “உண்ணும் உணவோடு உறக்கமும் நீத்து உற்றாள்” என்றும் உரைக்கின்றாள். இஃது உண்டியிற் குறைதல், உடம்பு நனி சுருங்கல் என்னும் மெய்ப்பாடென்பர் தொல்காப்பியர். எளிதிற் கருத்திற் கொண்டு செல்லும் பொருட்டு “ஒருமொழி” எனக் குறிக்கின்றாள். இக்கருத்தையே “ஐயா நீ உலாப் போந்த அன்று முதல் இன்றுவரை கையாரத் தொழுதருவி கண்ணாரச் சொரிந்தாலும் செய்யாயோ அருள்” (திரை லோக்கி) என வரும் கருவூர்த் தேவர் திருவிசைப் பாவிலும் காணலாம்.

     (1)