1505. வடிக்குந் தமிழ்த்தீந் தேன்என்ன
வசனம் புகல்வார் ஒற்றிதனில்
நடிக்குந் தியாகர் திருமுன்போய்
நாராய் நின்று நவிற்றாயோ
பிடிக்குங் கிடையா நடைஉடைய
பெண்க ளெல்லாம் பிச்சிஎன
நொடிக்கும் படிக்கு மிகுங்காம
நோயால் வருந்தி நோவதுவே.
உரை: நாரையே, பிடியானைக்கும் நிகராக வொண்ணாத நடையையுடைய பெண்களெல்லாரும் கண்டு இவள் பித்தேறினாள் என்று சொல்லும்படி மிக்க விரகநோய் கொண்டு இந் நங்கையாகிய நான் வருந்துகிற இந்நிலையை, குற்றம் நீங்கிய தமிழ் மொழியிடத்து ஒழுகும் தேன் போன்ற சொற்களை வழங்குபவரும், திருவொற்றியூர்த் திருக்கோயில் அம்பலத்தில் நடிப்பவருமாகிய தியாகப் பெருமான் திருமுன் சென்று நின்று சொல்ல மாட்டாயா? எ.று.
குற்றமற்ற தமிழ் மொழியால் இனிய தேன் போன்ற சொற்களைச் சொல்பவர் என்பார், “வடிக்குந் தமிழ்த் தீந்தேன் என்ன வசனம் புகல்வார்” என்கின்றார். வடிக்குந் தீந்தேன் என்னத் தமிழ் வசனம் புகல்வார் என இயைத்துக் கோதற வடிக்கப்பட்ட இனிய தேன் போன்ற தமிழ்ச் சொற்களை வழங்குபவர் என்றலுமொன்று. பாடல் சான்ற திருக்கோயில் தோறும் கூத்தப் பிரானுக்கு மன்றம் உண்மையின் “ஒற்றி தனில் நடிக்கும் தியாகர்” எனப் பராவுகின்றார். பெண்கள் நடைக்குப் பிடி யானையை உவமிக்கும் மரபு பற்றி, “பிடிக்கும் கிடையா நடையுடைய பெண்கள்” என வுரைக்கின்றார். தான் எய்தி வருந்தும் வருத்தம் கண்டு பித்தேறினாள் எனப் பெண்கள் எல்லாம் அலர் கூறுமாறு, தான் காமநோயுற்று வருந்துவதாக எடுத்துரைப்பாள், “பெண்கள் எலாம் நொடிக்கும்படிக்கு மிகும் காம நோயால் வருந்தி நோவதை நவிற்றாயோ” என்று நவிலுகின்றாள். இதனைச் சொல்லுந் திறம் விளக்குவாளாய்த் தியாகர் திருமுன்பு சென்று பணிவுடன் நின்று சொல்லுக என்பாள், “தியாகர் திருமுன் போய் நின்று நவிற்றாயோ” என்று அறிவிக்கின்றாள். நொடித்தல் - சொல்லுதல். “நோயும் துன்பமும் நொடிவது போலும்” (கொலைக்) என்பது சிலப்பதிகாரம். (3)
|