1507.

     ஒல்லார் புரமூன் றெரிசெய்தார்
          ஒற்றி அமர்ந்தார் எல்லார்க்கும்
     நல்லார் வல்லார் அவர்முன்போய்
          நாராய் நின்று நவிற்றுதியே
     அல்லார் குழலாள் கண்ணீராம்
          ஆற்றில் அலைந்தாள் அணங்கனையார்
     பல்லார் சூழ்ந்து பழிதூற்றப்
          படுத்தாள் விடுத்தாள் பாயல்என்றே.

உரை:

      பகைவருடைய மதில் மூன்றையும் எரித்துச் சாம்பராக்கியவரும், திருவொற்றியூரில் எழுந்தருள்பவரும், எல்லார்க்கும் நல்லவரும், எல்லாம் வல்லவருமான தியாகப்பெருமான் திருமுன்பு சென்று நின்று, நாரையே, இருண்ட கூந்தலையுடைய நின் காதலியாகிய நங்கை கண்ணீரை ஆறாகப் பெருக்கி அதன்கண் வீழ்ந்து அலைவுறுகின்றாள்; தன்னையொத்த மகளிர் பலர் பக்கலிருந்து பழிக்குமாறு படுக்கையிற் கிடந்து உறங்குவதை விட்டொழித்தாள் என்று சொல்ல மாட்டாயா? எ.று.

     ஒல்லார் - பகைவரான அசுரர் மேற்று. “விண்ணிலார் இமையவர் மெய்ம்மகிழ்ந் தேத்தவே, எண்ணிலார் முப்புரம் எரியுண நகை செய்தார்” (மழபா) என்று ஞானசம்பந்தர் நவில்வது அறிக. “உலகினார் ஏத்தநின் றானுறையுமிடம் ஒற்றியூர்” (ஞானசம்) எனப் பெரியோர் பரவுதலால், “ஒற்றி யமர்ந்தார்” என்கின்றார். எல்லார்க்கும் நல்லார் என்பதற்கேற்ப, “எல்லாம் வல்லார்” என ஒரு சொற் பெய்துரைக்கப் பட்டது. கரிய கூந்தல் இருணிறமுடைத் தாதல்பற்றி, “அல்லார் குழல்” எனப்பட்டது. அலைதல் - அலைவுறுதல்; வருந்துதலுமாம். அணங்கனையார் - அணங்கொத்த மகளிர். அணங்கு - வருத்தும் தெய்வம். உரிய பண்பும் செயலும் மாறியிருப்பதால் மகளிர் பழிக்கின்றார்கள் என அறிக. பழி தூற்றப் படுத்தாள் - பழி தூற்றும் அளவிற்குத் தன்னைக்கீழ்ப் படுத்திக்கொண்டாள். பாயல் - உறக்கம். “பாயல் கொண்ட பனிமலர் நெடுங்கண்” (ஐங். 315) என வருவது காண்க. 'நாராய், பாயல் விடுத்தாள் என்று, அவர் முன் போய் நின்று, நவிற்றுதி என வினை முடிவு செய்க.

     (5)