1508. ஓவா நிலையார் பொற்சிலையார்
ஒற்றி நகரார் உண்மைசொல்லும்
தூவாய் மொழியார் அவர்முன்போய்ச்
சுகங்காள் நின்று சொல்லீரோ
பூவார் முடியாள் பூமுடியாள்
போவான் வருவாள் பொருந்துகிலாள்
ஆவா என்பாள் மகளிரொடும்
ஆடாள் தேடாள் அனம்என்றே.
உரை: எங்கும் எப்பொருளின்றும் நீங்காத இயல்பினரும், பொன்மலையாலாகிய வில்லையுடையவரும், திருவொற்றியூருடையவரும், மெய்ம்மையாகிய தூய வாய்மைகளையே பேசுபவருமாகிய தியாகப்பெருமான் திருமுன்பு சென்று, கிளிகளே, பூக்களையணியும் நீண்ட கூந்தலையுடைய நங்கையாகிய எங்கள் தலைவி இப்பொழுது தலையிற் பூச்சூடுவதில்லை; ஓரிடத்தும் பொருந்தியிராமல் இங்குமங்கும் போவதும் வருவதுமாகி ஆஆ எனப் பெருமூச்செறிகிறாள்; ஏனை மகளிரொடு கூடியாடுவதும் வேளைக்கு உணவுகொள்வதுமில்லாமல் இருக்கின்றாள் என்று சொல்லுவீர்களா? எ.று.
ஓவா நிலை - எங்கும் எப்பொருளிலும் நீக்கமற நிறைந்திருக்கும் நிலை. பொன்மலை - பொன்னிறம் கொண்ட மேருமலை. அதனை வில்லாக வளைத்துக்கொண்டமை சான்றோர் பாட்டுக்களில் பல்கிக் காணப்படுவதால் “பொற் சிலையார்” எனப் புகழ்கின்றார். உள்ளதன் உண்மையை ஒளிவு மறைவின்றி உரைப்பது மிக்க திண்மையுடையார்க்கே இயல்வது; திண்மையின் வடிவமாதலால், “உண்மை சொலும் தூவாய் மொழியார்” எனவுரைக்கின்றார். ஓரிடத்தும் நின்று நிலவுவதில்லாமையால் “நின்று சொல்லீரோ” என வேண்டுகிறாள். இயல்பிலே புதிய பூக்களையணிந்து கொள்பவள் என்றற்குப் “பூவார் முடியாள்” என்றும், பூ முடித்துப் புனைந்து கொள்ள மறுப்பதை யுணர்த்தப் “பூ முடியாள்” என்றும் புகழ்கின்றாள். மனத்தின்கண் அமைதியில்லாமையால் ஓரிடத்தும் பொருந்தியிராமல் போவதும் வருவதுமாய் அலைவது விளங்க, “போவாள் வருவாள் பொருந்துகிலாள்” எனவும், துயர்வு கலந்த அயர்வினால் நெட்டுயிர்ப்புறுவது தோன்ற “ஆ ஆ என்பாள்” எனவும் இயம்புகிறாள். ஆடலும் பாடலும் இளம்பெண்ணுக்கு இயற்கையாகவும் அவற்றையும் செய்வதில்லை; வேளைதோறும் வெண்சோறும் உண்பதில்லை என்றற்கு “ஆடாள் தேடாள் அனம்” எனக் கூறுகிறாள்.
'சுகங்காள், அவர்முன் போய் நின்று, என்று சொல்லீரோ' என வினை முடிவு செய்க. (6)
|